முகப்பு
சென்னை

அரசு மருத்துவமனையில் பக்கவாதத்துக்கு இலவச மருந்து

பக்கவாதத்தை குணமாக்கும் விலை உயர்ந்த மருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:02 AM
பகிர்:

பக்கவாதத்தை குணமாக்கும் விலை உயர்ந்த மருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோர் 3 மணி நேரத்துக்குள்ளாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். அப்படி அனுமதிக்கப்படும் நோயாளிக்கு சுமார் ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள ஊசி மருந்து (ரத்தக் கட்டி அடைப்பை நீக்கும் மருந்து) செலுத்தப்பட வேண்டும்.

இந்த விலை உயர்ந்த மருந்தை செலுத்துவதன் மூலம் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டோர் ஒரு வாரத்தில் முழுவதுமாக நோயிலிருந்து விடுபடுவர்.

Advertisement

உலகம் முழுக்க 6 விநாடிக்கு ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. பக்கவாதம் நோய் வயது வித்தியாசமின்றி எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம்.

பக்கவாதம் நரம்பியல் சார்ந்த நோய். நரம்புகள் மூளையிலும், தண்டுவடத்திலும் ஆரம்பித்து தசைகளை இயக்குகின்றன. மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் ரத்தம் உறைந்தாலோ, அந்த ரத்தக் குழாய்கள் வெடித்தாலோ "ப்ரெயின் அட்டாக்' ஏற்படும்.

அப்போது மூளையின் எந்தப் பகுதிக்கு ரத்த ஓட்டம் செல்வது குறைகிறதோ,

அந்தப் பகுதி பாதிக்கப்படும். உடனடியாக கவனிக்காவிட்டால் உடலின் ஒரு பகுதி செயலிழந்து போகும்.

வாய் கோணுதல், வார்த்தைகள் குளறுதல், நடையில் தள்ளாட்டம், தடுமாற்றம், கை-கால் தூக்கமுடியாத நிலை, கை-கால்கள் உணர்ச்சியற்று மரத்துப் போதல் போன்ற அறிகுறிகள் தென்பட்ட நாலரை மணி நேரத்திற்குள் நோயாளியை அதற்குரிய மருத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றால் பக்கவாத செயலிழப்பை தடுத்திட முடியும்.

ஆனால் பெரும்பாலும் பக்கவாதம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத குடும்பங்கள் பல மணி நேரத்துக்கு பின்பே மருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிக்கின்றனர்.

இதற்கான சிகிச்சை மிகவும் விலை உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.

மேலும் தனியார் மருத்துவமனையில்தான் இதற்கான விலை உயர்ந்த மருந்துகள் கிடைத்து வந்தன.

இப்போது ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பக்கவாதத்தை குணப்படுத்தும் மருந்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இலவசமாக வழங்கி சிகிச்சையளிக்கப்படுகிறது.

இது குறித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் டாக்டர் வே.கனகசபை கூறியது:

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரை 3 மணி நேரத்தில் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டும். நோயாளிக்கு உடனடியாக ஸ்கேன் செய்யப்படும். ஸ்கேனில் ரத்தக் குழாய் அடைப்பா அல்லது ரத்தக் குழாய் வெடிப்பா என்று ஆராயப்படும்.

நோயாளிக்கு ரத்த குழாய் வெடிப்பிருந்தால் குணமாக்குவது கடினம். ஆனால் நோயாளிக்கு ரத்தக் குழாய் அடைப்பு இருந்தால் அவருக்கு ரூ.45 ஆயிரம் மதிப்பிலான ஊசி மருந்து செலுத்தப்படும்.

பின்பு அவர் 3 நாள்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்படுவார். நோயாளிக்கு மீண்டும் ஸ்கேன் செய்யப்பட்டு ரத்தக் குழாய் அடைப்பு சரி செய்யப்பட்டுவிட்டதா என்று கண்டறியப்படும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோரை விரைவாக மருத்துவமனையில் சேர்ப்பதன் மூலம் நோயாளி ஒரு வாரத்துக்குள்ளாக முழுவதுமாக குணமடைந்து வீட்டுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது.

இந்த ஊசி மருந்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இலவசமாக போடப்படும். இதற்கான நிதி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டின் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

இப்போது இந்த மருந்தை பயன்படுத்தி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 2 நோயாளிகள் முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்றார் டாக்டர் கனகசபை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments