சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்
கோடை விடுமுறை காரணமாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால்
கோடை விடுமுறை காரணமாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் பயணிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் பலப்படுத்தியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணிகள் ஏறுவதை ஒழுங்குப்படுத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை ரயில்வே பாதுகாப்பு படையினரும், ரயில்வே போலீஸாரும் இணைந்து செய்துள்ளனர்.
இந்தாண்டு கோடை விடுமுறை காலத்தில் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 6 முதல் 8 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக கூட்டத்தை ஒழுங்குபடுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
Advertisement
ரயில் நிலைய நடைமேடைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படையினர் 165 பேரும், ரயில்வே போலீஸ் சார்பில் 120 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ஏறும் பயணிகளை வரிசையில் நிற்க வைத்து ரயிலில் ஏற வைக்கின்றனர்.
இதனால் தேவையில்லாத தள்ளுமுள்ளுகள், கூச்சல் குழப்பங்கள் தவிர்க்கப்படுகின்றன. மேலும் பெண்களுக்கென முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றும் தனியாக ஒதுக்கப்படுகிறது. இதில் ரயில்வே பாதுகாப்பு படையின் மகளிர் பிரிவு போலீஸார் கூட்டத்தை ஒழுங்குப்படுத்துகின்றனர்.
சென்னை ரயில்வே கோட்ட முதன்மை பாதுகாப்பு ஆணையர் எஸ்.ஆர்.காந்தி உத்தரவின் பேரில் எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் யுவராஜா பாதுகாப்பு பணிகளை கண்காணித்து வருகிறார்.
"ஆர்.பி.எஃப். மித்ரா' எனப்படும் தன்னார்வ ரயில்வே ஊழியர்கள், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பயணிகள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ரயில்வே போலீஸாருடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அறிவிப்புகள்: பயணிகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் ஒலி பெருக்கி மூலம் பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் செய்யப்படுகின்றன. ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் இந்த அறிவிப்புகளை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
"சங்கிலி திருடர்கள் ஜாக்கிரதை', "அறிமுகமில்லாதவர் தரும் உணவுப் பொருளை ஏற்காதீர்', "பயணிகள் தங்களது உடைமைகளை சங்கிலியால் இணைத்து பூட்டி வைக்கவும்', "வெடி பொருள்களை எடுத்து செல்வது சட்டப்படி குற்றம்' என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ்கள் பயணிகளிடம் கொடுக்கப்படுகிறது.
காணொளி காட்சி: கடந்த சில நாள்களுக்கு முன்பு எழும்பூரில் காணொளி காட்சி மூலம்
திருடர்கள், போதை பொருள் கையாள்பவர்களின் புகைப்படங்கள் பயணிகளின் விழிப்புணர்வுக்காக வெளியிடப்பட்டது. மேலும் ரயில்களில் சமூக விரோதிகள் எவ்வாறு செயல்படுவார்கள் என பவர் பாயிண்ட் மூலம் விளக்கப்பட்டது.
குற்றவாளிகளை கண்டுபிடிக்க சென்னை எழும்பூரில் வைத்துள்ள 28 சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுவதாக ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
ஆயுதங்களுடன் பாதுகாப்புஎக்ஸ்பிரஸ் ரயில்களில் பாதுகாப்பு பணிகளில் ஆயுதம் தாங்கிய ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரலில் இருந்து ஏராளமான ரயில்கள் செல்கின்றன. இதில் குறிப்பிட்ட 5 எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒரு எஸ்.ஐ. தலைமையிலான 4 ரயில்வே பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவசர உதவி எண்
ரயில் பயணிகள் பாதுகாப்பு குறித்த புகார்களை தெரிவிக்க ரயில்வே பாதுகாப்பு படையினர் சார்பில் 9003161710 என்ற அவசர உதவி எண் வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு பிரத்யேகமாக 044-25353999 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.