மாநகராட்சி விரிவாக்கம்: திரிசங்கு நிலையில் சென்னை குடிநீர் வாரிய ஊழியர்கள்
சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட நகராட்சிகளில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்திற்கு பணி மாற்றம் பெற்ற சுமார் 400 ஊழியர்கள் கடந்த 18 மாதங்களாக தினக்கூலிகளைப் போல் சம்பளம் பெற்று வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைமாநகராட்சி விரிவாக்கம்: திரிசங்கு நிலையில் சென்னை குடிநீர் வாரிய ஊழியர்கள்
சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட நகராட்சிகளில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்திற்கு பணி மாற்றம் பெற்ற சுமார் 400 ஊழியர்கள் கடந்த 18 மாதங்களாக தினக்கூலிகளைப் போல் சம்பளம் பெற்று வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட நகராட்சிகளில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்திற்கு பணி மாற்றம் பெற்ற சுமார் 400 ஊழியர்கள் கடந்த 18 மாதங்களாக தினக்கூலிகளைப் போல் சம்பளம் பெற்று வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் பகுதிகளாக இருந்த திருவொற்றியூர், கத்திவாக்கம், மாதவரம், மணலி, அம்பத்தூர், ஆலந்தூர், மதுரவாயல், வளசரவாக்கம் உள்ளிட்ட நகராட்சிகளை சென்னை மாநகராட்சியோடு இணைப்பது என தமிழக அரசு அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2011, அக்டோபர் 24-ஆம் தேதி முறைப்படி இந்நகராட்சிகள் அனைத்தும் இணைக்கப்பட்டன. மேலும் மாநகராட்சி நடைமுறைகளுக்கு ஏற்ப நிர்வாக அமைப்புகளிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டன.
இதன்படி முன்பு நகராட்சி நிர்வாகங்கள் வசமிருந்த குடிநீர் விநியோகம், கழிவு நீர் அகற்றும் பணி உள்ளிட்டவை சென்னை குடிநீர் வாரியம் வசம் ஒப்படைக்கப்பட்டன.
எஞ்சிய பணிகளை மாநகராட்சி நிர்வாகம் ஏற்றது. மேலும் நகராட்சி ஊழியர்கள் சென்னை மாநகராட்சியிலோ அல்லது சென்னை குடிநீர் வாரியத்திலோ தங்களை இணைத்துக் கொள்ளலாம் எனவும், இதிலும் விருப்பம் இல்லாதவர்கள் தமிழகத்தின் வேறு நகராட்சிகளுக்கு பணி மாற்றத்தில் செல்லலாம் எனவும் விருப்பச் சலுகைகள் அளிக்கப்பட்டடன.
சுமார் 400 ஊழியர்கள்: இணைக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளைச் சேர்ந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களில் பெரும்பாலானோர் மாநகராட்சியில் பணி செய்யவும், சிலர் நகராட்சி நிர்வாகங்களில் பணி செய்யவும் விண்ணப்பித்தனர். இதே போல் குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றல் பிரிவில் பணி செய்து வந்த ஊழியர்களில் சுமார் 400 பேர் சென்னை குடிநீர் வாரியத்தில் பணி செய்ய விண்ணப்பித்தனர்.
மாநகராட்சியில் பணி செய்ய விண்ணப்பித்தவர்களைச் சேர்க்க ஓராண்டுக்கு முன்பே அரசாணை பிறப்பிக்கப்பட்டு அனைவரும் பணி வரைமுறைப்படுத்தப்பட்டனர். மேலும் இவர்கள் அனைவரும் இதர மாநகராட்சி ஊழியர்கள் போல ஊதியம், காப்பீடு, பணி உயர்வு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் பெற்று வருகின்றனர். ஆனால் சென்னை குடிநீர் வாரியத்தில் பணியாற்ற விருப்பம் தெரிவித்தவர்கள் எவருக்கும் இதுவரை பணி வரைமுறைப்படுத்தப்படவில்லை
தினக்கூலிகளைப் போல் சம்பளம்: இப்பிரச்னை குறித்து ஊழியர்கள் கூறியது:
சென்னை குடிநீர் வாரியத்திற்கு மாறினால் சென்னையிலேயே ஓய்வுபெறும் வரை பணி செய்யலாம் என்பதாலும், ஏற்கனவே நகராட்சிகளில் பார்த்த அதே வேலைதான் என்பதாலும் சென்னை குடிநீர் வாரியத்தில் பணியாற்ற விருப்பம் தெரிவித்தோம்.ஆனால் இதுவரை பணி வரைமுறைப்படுத்தப்படவில்லை.
இதுவரை ஊழியர் பதிவு எண்கள் வழங்கப்படவில்லை. சம்பளம் பெற வங்கிக் கணக்கு எண் ஒதுக்கப்படவில்லை. இதனால் சம்பளம் ரொக்கமாக கவரில் போட்டு வழங்குகின்றனர். மேலும் ஊதிய விபரம் குறித்த பட்டியலும் முழுமையாக இல்லை. ஊதியத்தை வழங்குவது யார், அதனை வழங்குவது சென்னை குடிநீர் வாரியமா அல்லது முந்தைய நகராட்சி நிர்வாகமா என்ற எவ்விதத் தகவலும் இருப்பதில்லை.
பணி வரன்முறைப்படுத்தாததால் ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவைகளும் இல்லை. எங்களோடு சமநிலையில் பணியாற்றி மாநகராட்சியில் இணைந்த சக ஊழியர்கள் பதவி உயர்வு பெற்று மாதச் சம்பளத்தில் ரூ.10 ஆயிரம் வரை அதிகம் வாங்குகின்றனர். நகராட்சியிலும் இல்லாமல், குடிநீர் வாரியத்திலும் இல்லாமல் திரிசங்கு நிலையில் தினக்கூலிகளாக நடத்தப்படுகிறோம் என்பதே உண்மை என்றனர்.
குழு பரிந்துரைக்குப் பிறகு அரசாணை: இது குறித்து சென்னைக் குடிநீர் வாரிய பொது மேலாளர் (பணியாளர்) பாஸ்கரன் கூறியது:
ஊழியர்களுக்கு உரிய சலுகைகள் கிடைக்க முதலில் அவர்கள் வரன்முறைப்படுத்தப்பட வேண்டும். இதற்கென குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. இக்குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் அரசாணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்படும் என்றார்.