இந்து முன்னணி பிரமுகர் படுகொலை: பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம்
திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் படுகொலை செய்யப்பட்டதற்கு மத்திய இணை அமைச்சரும், தமிழக பாஜக தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன்
திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் படுகொலை செய்யப்பட்டதற்கு மத்திய இணை அமைச்சரும், தமிழக பாஜக தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்து முன்னணி அமைப்பின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார், புதன்கிழமை (ஜூன் 18) சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்தச் செயல் மிகவும் கண்டனத்துக்குரியது.
Advertisement
அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையத்துக்கு அருகில் சுரேஷ்குமாரின் டெலிபோன் பூத்தில் இரவு 10.30 மணிக்கு இந்தப் படுகொலை நடந்துள்ளது.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுரேஷ்குமார் இந்து முன்னணியில் பல ஆண்டுகள் சமூகப் பணியாற்றியவர். மறந்தும் பிறருக்கு தீங்கு நினைக்காத தூய எண்ணம் கொண்டவர். அப்படிப்பட்டவர் கொல்லப்பட்டிருப்பது சமூக சிந்தனையாளர்கள் அனைவருக்கும் பேரிழப்பாகும்.
தமிழகத்தில் இந்து அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்படுவது வாடிக்கையாக மாறிவிட்டது. கடந்த ஆண்டில் பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் ஆடிட்ட ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். இதில் குற்றவாளிகளை தண்டிக்கும் வகையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை துரிப்படுத்தாத காரணத்தால் மீண்டும் இதுபோன்ற கொடூரச் சம்பவம் தொடர்ந்து வருகிறது.
தமிழக அரசு இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற கொலைகளைத் தடுக்க முடியும்.
சுரேஷ்குமாரை கொன்ற கொலைக் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.