முகப்பு
சென்னை

அ.தி.மு.க. ஆட்சியில் பாலாறு பிரச்சினைக்காக நான் அறிக்கை விட்டது பாவகரமான காரியமா? கருணாநிதி

அ.தி.மு.க. ஆட்சியிலே இருக்கின்ற போது  பாலாறு பிரச்சினைக்காக நான் அறிக்கை விட்டது பாவகரமான காரியமா?  என்று கேள்வி எழுப்பியுள்ள கருணாநிதி, அதனை பத்திரிக்கையாளர்கள்,

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

அ.தி.மு.க. ஆட்சியிலே இருக்கின்ற போது  பாலாறு பிரச்சினைக்காக நான் அறிக்கை விட்டது பாவகரமான காரியமா?  என்று கேள்வி எழுப்பியுள்ள கருணாநிதி, அதனை பத்திரிக்கையாளர்கள், கற்றறிவாளர்கள் இதிலே என்ன நியாயம் உள்ளது என்பதை தயவுசெய்து சிந்தித்துப்பார்க்க வேண்டுமென்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாலாறு நதி நீர் பிரச்சினை பற்றி புதிய சீமாந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேசிய கருத்தினையொட்டி, 21.-6.-2014 அன்று ஓர் அறிக்கை அவருக்கு விளக்கமளித்து நான் கொடுத்திருந்தேன்.

அதே பாலாறு பிரச்சினைக்காக தமிழக முதல் – அமைச்சர் ஜெயலலிதா இன்றைய தினம் ஒரு நீண்ட அறிக்கை கொடுத்துள்ளார். அந்த அறிக்கையில் எப்போதும் போல, நான் கொடுத்த அறிக்கை பற்றி விமர்சனம் செய்திருக்கிறார். நான் கொடுத்த அறிக்கை, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறிய கருத்துக்குப் பதில். அதிலே ஒரு இடத்திலே கூட தமிழக முதல் – அமைச்சர் ஜெயலலிதா பற்றியோ, தமிழக அ.தி.மு.க. அரசு பற்றியோ ஒரு வார்த்தை கூட விமர்சித்துக் கூறவில்லை.

ஆனால் முதல் – அமைச்சர் அறிக்கையின் முதல் வாக்கியமே, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது உறவுக்கு கை கொடுப்பதும், ஆட்சி அதிகாரம் இல்லாதபோது உரிமைக்குக் குரல் கொடுப்பது போல் நடிப்பதும், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கை வந்த கலை என்று கூறியிருக்கிறார். காவிரி பிரச்சினையிலும், முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும் எந்த நடவடிக்கையும் நான் எடுக்கவில்லை என்று பாலாறு பற்றி ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையிலே எப்போதும் போல குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

மேலும் ஜெயலலிதா தனது அறிக்கையில் 2006ஆம் ஆண்டுக்குப் பின், ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் பிரச்சினையை எழுப்பிய போது, எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா, அதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தி.மு.க. அரசை, வலியுறுத்தியதாகச் சொல்லியிருக்கிறார்.தி.மு.க ஆட்சியிலே இருந்த போது, ஜெயலலிதா இதே பாலாறு பிரச்சினைக்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அறிக்கை விடலாம். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியிலே இருக்கிற போது பாலாறு பிரச்சினைக்காக நான் அறிக்கை விட்டது பாவகரமான காரியமா?

தமிழ்நாட்டு மக்கள், பத்திரிகையாளர்கள், கற்றறிவாளர்கள் இதிலே என்ன நியாயம் உள்ளது என்பதை தயவுசெய்து சிந்தித்துப்பார்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

பாலாற்றில் அணை கட்டுவது பற்றி சீமாந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசிய செய்தி பத்திரிகைகளில் வந்தவுடன், ஜெயலலிதா அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசித் ததாகவும், மத்திய அரசுக்கு தலைமைச் செயலாளர் 20.6.2014 அன்று இதுகுறித்து கடிதம் எழுதியிருப்பதாகவும் ஜெயலலிதா இன்றைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் அரசு அதிகாரிகளிடம் பேசியது பற்றியோ, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது பற்றியோ இந்த அறிக்கை வெளிவரும் வரை எந்தப் பத்திரிகையிலாவது செய்தி வெளியிடப்பட்டதா? ஆனால் அதே பிரச்சினைக்காக நான் விடுத்த அறிக்கை தான் ஏடுகளில் வெளி வந்தது. அந்த அறிக்கை வெளிவந்த பிறகு தான் முதலமைச்சர் அவசர அவசரமாக நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இந்தி மொழி பிரச்சினையிலே கூட கடந்த வாரம் நான் அறிக்கை விடுத்து, மத்திய அரசும் நடவடிக்கை எடுத்த பிறகு, அது பற்றி தெரிந்து கொள்ளாமலேயே முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை விடுத்தார்.காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் தமிடிநாட்டின் உரிமை தன்னால் தான் நிலை நாட்டப்பட்டது என்று அவருடைய அறிக்கையில் தனக்குத் தானே ஜெயலலிதா பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறார்.

நடுவர் மன்றம் தெரிவித்த காவேரி மேலாண்மை வாரியம் கூட இன்னும் அமைந்த பாடில்லை. காவேரியில் கடந்த மூன்றாண்டு காலமாக நீர் வரவும் இல்லை. குறுவைப் பாசனம் நடக்கவும் இல்லை. இன்றைக்கு ஜூன் 23–ம் தேதி, ஜூன் 12–ம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை இன்று வரை திறக்கப்படவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டுமென்று பல தரப்பிலும் கேட்டுக் கொண்டும் அதைக் காதிலே போட்டுக் கொள்ளவில்லை. இவ்வாறு கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →