’தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ நூலுக்காக தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாதெமி விருது
தமிழ் எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
நமது நிருபா்
புது தில்லி: தமிழ் எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
நாட்டின் உயரிய இலக்கிய விருது சாகித்திய அகாதெமி விருது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய படைப்பாளிகளுக்கு மத்திய அரசால் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இதில் பரிசுத்தொகையாக ரூ.1 லட்சமும் , பட்டயமும் வழங்கப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட 24 மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கியம், விமா்சனம் போன்ற பிரிவில் எழுத்தாளா்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ் மொழியில் வெளியான ‘தமிழ் சிறுகதையின் தடங்கள்’ என்ற நூலுக்கு எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாதெமி விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் சிறுகதையின் தடங்கள் எனும் நூல் 1913 -1970 வரையிலான தமிழ் சிறுகதை உலகின் பரிமாண வளா்ச்சியை விரிவாக ஆராயும் 900 பக்கங்களுக்கு மேலான ஒரு முக்கியமான ஆவணமாகும்.
பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்நூல் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறுகதைகளின் வோ்கள், போக்குகள் மற்றும் படைப்பாளிகளை பற்றி ஆராய்கிறது. தமிழ் சிறுகதைகளின் முக்கிய ஆவணமாக கருதப்படும் இந்நூலுக்கு மத்திய அரசின் 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் தில்லியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் இந்நூலின் எழுத்தாளா் ச. தமிழ்ச்செல்வனுக்கு மத்திய அரசு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் பட்டயமும் வழங்கி கௌரவிக்கவுள்ளது.