முகப்பு
சென்னை

ஐகோர்ட் காலனி ஆக்கிரமிப்பு! காணாமல் போன குளமும் பூங்காவும்

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள உயர்நீதிமன்ற ஊழியர்கள் குடியிருப்பின் ஒரு பகுதி சில நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:15 PM
பகிர்:

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள உயர்நீதிமன்ற ஊழியர்கள் குடியிருப்பின் ஒரு பகுதி சில நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
வில்லிவாக்கத்தில் ஐகோர்ட் காலனி என பரவலாக அறியப்படும் இந்தப் பகுதியின் ஒரு பிரிவில் குளமும், மறுபுறம் பூங்காவும் இருந்துள்ளன.
இப்போது இந்தக் குளம் இருந்த பகுதியும் பூங்கா பகுதியும் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மேலும், இந்த ஐகோர்ட் காலனியில் இருந்து நியூ ஆவடி சாலைக்கு வருவதற்கான பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கேயும் கட்டடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளன.
இதனால், ஐகோர்ட் காலனி குடியிருப்பு வாசிகளுக்கு அவர்கள் இருக்கும் பகுதியில் இருந்து பிரதான சாலைக்குச் செல்ல வேண்டுமென்றால் ஒரே வழிதான் உள்ளது. இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவதாகவும் அந்தப் பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
"இந்த ஆக்கிரமிப்புக்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இருந்தாலும், எங்களுக்கு சாதகமான பல்வேறு ஆதாரங்கள் இருந்தாலும் உரிய பலன் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர் அப்பகுதி வாசிகள்.
பொதுநல வழக்கு: வில்லிவாக்கம் தெற்கு ஐகோர்ட்டு காலனியில் பூங்கா, குளம், கால்வாய் உள்ளிட்ட பொது உபயோகத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை அரசு அதிகாரிகளின் உதவியுடன் தனிநபர்கள் பலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர்.
ஐகோர்ட்டு காலனியின் அசல் வரைபட நகலுடன் அனைத்துப் பகுதிகளையும் முறையாக சர்வே செய்து, ஆக்கிரமிப்புக்களை அகற்ற அதிகாரிகளுக்கு பலமுறை மனு செய்தும் எந்தப் பயனும் இல்லை.
1951 ஆம் ஆண்டு நகரமைப்புக்குழு இந்த காலனி "லேஅவுட்டுக்கு' அங்கீகாரம் வழங்கியுள்ளது. சர்வே எண்கள் 237 மற்றும் 238-ல் மொத்தம் 47 மனையிடங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆனால், தற்போது 68 பேர், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களை ஆக்கிரமித்துள்ளனர்.
இந்த ஆக்கிரமிப்புகளால் பள்ளி செல்லும் குழந்தைகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஐகோர்ட்டு காலனி பகுதியை மறுசர்வே செய்து ஆக்கிரமிப்பில் உள்ள கட்டடங்களை இடிக்க உத்தரவிடவேண்டும் என்று தன்னார்வலர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த அப்போதைய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவின்பேரில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், பொதுஇடங்களை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளவர்களை கடந்த பிப்ரவரி 2016 ஆம் தேதி தேதி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தியதாகவும், அவர்கள் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் மறுசர்வே செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளது.
இதையடுத்து நீதிபதிகள், "சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்' என்று கூறி அடுத்தகட்ட விசாரணையை வரும் ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு
ஒத்திவைத்தனர்.


பொது மக்கள் எதிர்ப்பு

இந்த மாதம் ஏப்ரல் 20 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை (ஏப். 8) பிற்பகலில் ஆக்கிரமிப்பு இடங்கள் குறித்து சர்வே செய்யத் தொடங்கினர்.
ஆனால், 1950-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சர்வேக்கு பதிலாக, போலியாக பட்டா நிலம் என குறிப்பிடப்பட்ட 1997 ஆம் ஆண்டு ஆவணங்களை வைத்து சர்வே பணியை மேற்கொண்டனர். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயில் எங்கெல்லாம் ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளன என்பது தெளிவாக குறிப்பிடப்
பட்டுள்ளது.
இந்த சர்வேக்கு சார் ஆய்வாளர், வட்ட துணை ஆய்வாளர், ஆய்வாளர் (பராமரிப்பு) நில அளவை பதிவேடு துறை ஆகியோர் ஒப்புதல் அளித்துள்ளனர். இவ்வளவு வலிமையான ஆதாரத்தை வைத்து சர்வே மேற்கொள்ளாமல், போலியாக திரித்து தயாரிக்கப்பட்ட ஆவணங்களை வைத்து மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும் சர்வே மேற்கொண்டனர் என்று குற்றம் சாட்டுகிறார்கள் பொதுமக்கள்.
ஆக்கிரமிப்புகளுக்கு அதிகாரிகளே துணை போனதாகக் கூறும் பொதுமக்கள், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments