தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் இடிப்பு பணிகள் இதுவரை 35 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையிலுள்ள தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பிறகு, அந்த கட்டடம் வலுவிழந்து காணப்பட்டதால் அதனை இடிக்கும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன. இந்நிலையில், 4 -ஆவது நாளாக திங்கள்கிழமை காலை 8 மணி முதல் கட்டடம் இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
பெல்ட் அறுந்து விழுந்தது: காலை 10 மணியளவில் 7 -ஆவது தளத்திலிருந்து குளிரூட்டி கூடத்தை கவனமாக இடிப்பதற்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆலோசித்தனர். அதன்படி, 60 அடி உயரமுள்ள ஜாக் கட்டர் இயந்திரம், குளிரூட்டி கூடத்திலிருந்து குழாய்களை வெட்டி எடுத்து அப்புறப்படுத்தி வந்தது. அப்போது திடீரென இயந்திரத்திலுள்ள பெல்ட் அறுந்து விழுந்தது. அதன்பிறகு, ஊழியர்கள் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்வதற்கு 2 மணி நேரம் ஆனது. இதனால் கட்டட இடிப்புப் பணிகள் தாமதமானது.
கான்கிரீட் கழிவுகள் பிரிப்பு: பெரிய இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டாலும், இதர 2 சிறு நவீன ரக ஜாக் கட்டர் இயந்திரங்கள் முழுவீச்சில் செயல்பட்டன. கட்டட இடிப்பில் கீழே விழுந்துள்ள கம்பிகள், உலோக குழாய்கள், கட்டடப் பொருள்கள் ஆகியவற்றை தனியாக பிரிக்கும் பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
35 சதவீதப் பணிகள் நிறைவு: மதியத்துக்குப் பிறகு, மீண்டும் பெரிய ரக இயந்திரம் கட்டடத்தை இடிக்கத் தொடங்கியது. கடந்ச 4 நாள்களில், கட்டட இடிப்புப் பணியில் 35 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மேலும், பாதுகாப்புக்கென கட்டடத்தைச் சுற்றி 30 -40 அடிக்கு தடுப்பு திரைச்சீலைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அத்துடன் பாதுகாப்பு நடவடிக்கையாக, சென்னை சில்க்ஸ் அருகேயுள்ள மேம்பாலம், உஸ்மான் சாலை முழுவதும் வாகனப் போக்குவரத்தை போலீசார் அனுமதிக்கவில்லை.
இயல்பு நிலைக்கு திரும்பிய நடைபாதை கடைகள்
சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, அப்பகுதிக்கு அருகிலுள்ள முன்னணி வணிக நிறுவனங்கள், நடைபாதை கடைகள் என அனைத்தும் கடந்த புதன்கிழமை மூடப்பட்டன. இதில், சிறு நடைபாதை கடைகளை ஒன்றாக திறக்க வணிக சங்க பிரதிநிதிகள் போலீசாரிடம் அனுமதி கோரினர்.
இதையடுத்து, திங்கள்கிழமை காலை 11 மணியளவில் 50 -க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் திறக்கப்பட்டன. அவற்றில் பொருள்களை வாங்குவதற்கு பொதுமக்கள் வரத்தொடங்கியுள்ளதால், அப்பகுதி மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.