சின்னமலை -தேனாம்பேட்டை சுரங்க வழித்தடத்தில் விரைவில் மெட்ரோ ரயில் போக்குவரத்து
சின்னமலை -தேனாம்பேட்டை டிஎம்எஸ் இடையிலான சுரங்க வழித்தடத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்குவதற்காக, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான குழு இரு வாரங்களில்
சின்னமலை -தேனாம்பேட்டை டிஎம்எஸ் இடையிலான சுரங்க வழித்தடத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்குவதற்காக, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான குழு இரு வாரங்களில் ஆய்வு செய்ய இருப்பதாக மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னையில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது நேரு பூங்காவில் இருந்து சுரங்கப்பாதையில் கோயம்பேடு வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு, அங்கிருந்து உயர்நிலைப் பாதையில் வடபழனி, அசோக் நகர், ஆலந்தூர் வழியாக பரங்கிமலை வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
மற்றொரு வழித்தடமான வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையிலான பாதையில், இப்போது விமான நிலையத்தில் இருந்து கிண்டி வழியாக சைதாப்பேட்டை சின்னமலை வரை உயர்நிலைப் பாதையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் சின்னமலையில் இருந்து அண்ணாசாலை, சென்ட்ரல், உயர் நீதிமன்றம், மண்ணடி மற்றும் வண்ணாரப்பேட்டை வரை சுரங்கப்பாதை மற்றும் சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சின்னமலை -தேனாம்பேட்டை இடையே 4 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் ஜூலை மாதம் தொடங்கியது. இந்த வழித்தடத்தில் முதல்முறையாக டீசல் என்ஜின் வைத்து சோதனை நடத்தப்பட்டது. பின்பு, நான்கு பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் தற்போது இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
சிக்னல் பணிகள்: இந்த வழித்தடத்தில் ரயில் நிலையங்கள், சிக்னல் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தப் பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைந்ததும், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நேரில் வந்து அடுத்த கட்ட சோதனை செய்து, பயணிகள் ரயிலுக்கு அனுமதி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் டிஎம்எஸ், தேனாம்பேட்டை, நந்தனம் பகுதியில் சுரங்க ரயில் நிலையத்தில் வெண்டிலேஷன், சிக்னல், தானியங்கி கதவுகள், லிப்ட், டிக்கெட் கவுன்டர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்காவிலிருந்து வந்துள்ள டீசல் என்ஜின்
மின்தடை காரணமாக ஒரு இடத்தில் மெட்ரோ ரயில் நின்றுவிட்டால் அல்லது சுரங்கப்பாதையில் ரயில் சென்று கொண்டிருக்கும்போது பழுது ஏற்பட்டு சுரங்கத்தில் ரயில் பயணிகளுடன் சிக்கிக் கொண்டால், உடனடியாக கோயம்பேடு பணிமனையில் இருந்து டீசலால் இயங்கும் இழுவை என்ஜின் மூலம் இழுத்து வெளியே கொண்டு வர முடியும். மேலும், கோயம்பேடு பணிமனையில் மின்கம்பி இல்லாத பகுதியில் மெட்ரோ ரயிலை இழுவை என்ஜின் மூலம் தண்டவாளத்தில் கொண்டு வந்து நிறுத்தவும் பயன்படுத்தப்படும்.
இந்த இழுவை என்ஜின் 7 ஆயிரம் குதிரை சக்கி திறன் கொண்டது. மற்ற நகரங்களில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனங்களில் பேட்டரி மூலம் இயங்கும் இழுவை என்ஜின்தான் உள்ளது. சென்னையில் டீசல் மூலம் இயங்கும், அதே நேரம் குறைந்த அளவே புகை வெளியேற்றும் அளவுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இழுவை என்ஜின் அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.