அரசுப் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூல்: ஆணையத்தில் புகார்
நீலகிரி மாவட்டம், கூடலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறி, சென்னையில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான
நீலகிரி மாவட்டம், கூடலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறி, சென்னையில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான (எஸ்.சி. - எஸ்.டி.,) ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலை ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் தலைவர் எஸ்.ராஜ்குமார், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்த ஆணையத்தில் திங்கள்கிழமை அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டம், கூடலூர் கல்வி மாவட்டம் பிதிர்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கின்றனர். மேலும், இந்தக் கட்டணத்தைச் செலுத்தமாறு மாணவர்களை நிர்பந்திக்கின்றனர். கூடுதல் கட்டணம் வசூலித்ததற்கு கட்டண ரசீதுகளை வழங்கியுள்ளனர். இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டபோது, பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களிடம் அனுமதி பெற்று தீர்மானம் நிறைவேற்றி பணம் வசூலித்ததாகத் தெரிவித்தனர். இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுத்து தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ, மாணவிகளிடம் கூடுதலாகப் பெற்ற கல்விக் கட்டணத்தைத் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.