முகப்பு
சென்னை

சென்னை மாநகராட்சியுடன் பெல்ஜிய தலைநகர் பிரஸல்ஸ் நட்புறவு ஒப்பந்தம்

சென்னை மாநகராட்சியும், பெல்ஜியம் நாட்டின் பிரஸ்சல்ஸ் தலைநகர் மண்டலமும் இணைந்து நட்புறவு ஒப்பந்தத்தை புதன்கிழமை செய்துகொண்டன.

Updated On : 19 ஏப்ரல் 2018, 4:26 am IST
 அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் நட்புறவு ஒப்பந்தத்தை புதன்கிழமை பறிமாறிக்கொள்ளும் பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் மாநிலச் செயலர் பியான்கா டபேட்ஸ் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் 
பகிர்:

சென்னை மாநகராட்சியும், பெல்ஜியம் நாட்டின் பிரஸ்சல்ஸ் தலைநகர் மண்டலமும் இணைந்து நட்புறவு ஒப்பந்தத்தை புதன்கிழமை செய்துகொண்டன.
இந்த ஒப்பந்தத்தை தலைமைச் செயலகத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முன்னிலையில் மாநகராட்சி ஆணையர் தா. கார்த்திகேயனும், பெல்ஜியம் நாட்டின் பிரஸல்ஸ் தலைநகர மண்டலத்தின் சார்பில் அம்மாநிலச் செயலர் பியான்கா டபேட்ஸும் கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்டனர்.
இரு பெருநகரங்களுக்கு இடையேயான நட்புறவை வளர்த்துக்கொள்ளவும், ஜனநாயகம், மனிதநேயம், மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பொதுவான இலக்குகள் மற்றும் பாதிப்புகள் குறித்தும், இரண்டு நாட்டு மக்களின் பழைமையான, மதிப்புமிக்க மரபு பற்றிய விழிப்புணர்வு மேம்படும் வகையிலும், பொதுவான வளர்ச்சித் திட்டங்களை நிறுவுதல் தொடர்பாகவும் இந்த நட்புறவு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
அத்துடன், இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வகையில், நகர வளர்ச்சி மற்றும் நகர்ப்புற சவால்கள், நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார மேம்பாடு, புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப உள்ளூர் சமூகங்களை ஆதரிப்பது, அவசர காலத்தின்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.
மேலும், தகவல் தொழில்நுட்பம், நிர்வாகத் திறன் பரிமாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துதல் உள்ளிட்டவையும் இதில் இடம்பெற்றுள்ளன.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங், பெல்ஜியம் நாட்டின் இந்திய தூதர் ஜேன் லுயிக்ஸ், அந்நாட்டின் தென்னிந்தியாவுக்கான பொது தூதர் மார்க் வேன்டி ரெக்கன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.