போக்குவரத்து விதிமீறல்: அஞ்சல் நிலையங்களில் அபராதம் செலுத்துவோர் எண்ணிக்கை உயர்வு
சென்னையில் உள்ள அஞ்சல் நிலையங்களில் கடந்த 3 மாதங்களில் மட்டும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர் 42 ஆயிரத்து 669 பேர் பணமில்லா பரிவர்த்தனை திட்டத்தின் கீழ் அபராதத் தொகை
சென்னையில் உள்ள அஞ்சல் நிலையங்களில் கடந்த 3 மாதங்களில் மட்டும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர் 42 ஆயிரத்து 669 பேர் பணமில்லா பரிவர்த்தனை திட்டத்தின் கீழ் அபராதத் தொகை செலுத்தியுள்ளனர். இதில் ரூ.61 லட்சத்து 22 ஆயிரத்து 75 வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சாலை விபத்துகளைக் குறைக்க காவல்துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரிடம் அபராதம் வசூலிப்பதற்கு பணமில்லா பரிவர்த்தனைத் திட்டத்தை கடந்த 10-ஆம் தேதி சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தியது.
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர் தாங்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகையை ஏ.டி.எம். கார்டு ஸ்வைப்பிங் இயந்திரம், நெட் பேங்கிங், பேடிஎம், தமிழ்நாடு இ-சேவை மையங்கள், அஞ்சல் நிலையங்கள், நீதிமன்றத்தில் செலுத்தல் ஆகிய முறைகளில் செலுத்தலாம் என்று சென்னை காவல்துறை அறிவித்தது. இதன்படி, அவரவர் விருப்பப்படி அபராதத்தை செலுத்தி வருகின்றனர். இதில், அஞ்சல் நிலையங்களில் அபராதத்தை செலுத்துவோரின் எண்ணிக்கை கடந்த 3 மாதத்தில் படிப்படியாக உயர்ந்துள்ளது.
ரூ.61.22 லட்சம் வசூல்: அபராதத் தொகையை தமிழகத்தில் எந்த அஞ்சல் நிலையத்திலும் செலுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் 103 பேர் வெளியூர் அஞ்சல் நிலையங்களிலும் மீதமுள்ளவர்கள் சென்னையில் உள்ள 228 அஞ்சல் நிலையங்களிலும் அபராதத்தை செலுத்தியுள்ளனர்.
அஞ்சல் நிலையங்களில் கடந்த மே 10-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை 42, 669 பேர் இணையவழி மூலமாக ரூ.61 லட்சத்து 22 ஆயிரத்து 75 அபராதத்தை செலுத்தியுள்ளனர். ஜூலை மாதத்தில் 21, 689 பேர் ரூ.31 லட்சத்து 18 ஆயிரத்து 2, மே மாதத்தில் 5, 767 பேர் ரூ.8 லட்சத்து 48 ஆயிரத்து 861, ஜூன் மாதத்தில் 15, 213 பேர் ரூ.21லட்சத்து 55 ஆயிரத்து 212 அபராதம் செலுத்தியுள்ளனர்.
ரூ.2 லட்சம் வருவாய்: அஞ்சல் நிலையங்களில் அபராதம் கட்டுவோர் செலுத்தும் தொகைக்கேற்ப கமிஷன் கிடைக்கிறது. அந்த வகையில் ஜூலை 31-ஆம் தேதி வரை ரூ.2 லட்சம் வரை கமிஷன் கிடைத்துள்ளது.
விழிப்புணர்வு அதிகரிப்பு: சென்னை மண்டல அஞ்சல்துறை தலைவர் ஆர்.ஆனந்த், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் வசூலிப்பதற்கு பணமில்லாத பரிவர்த்தனை திட்டத்தை கடந்த மே 10-ஆம் தேதி சென்னையில் காவல்துறை அறிமுகப்படுத்தியது. அப்போது முதல் அஞ்சல் நிலையங்களில் அபராதத் தொகையை இணைய வழி மூலமாக செலுத்தும் வசதி செயல்படுகிறது. தமிழகத்தில் 2,600 அஞ்சல் நிலையங்களில் இணைய வழிமூலமாக பணத்தை செலுத்தும் வசதி உள்ளது. அதேபோல், சென்னை மண்டலத்தில் 567 அஞ்சல் நிலையங்களிலும், சென்னையில் 228 நிலையங்களிலும் இந்த வசதி உள்ளது. மாதம்தோறும் அஞ்சல் நிலையங்கள் மூலமாக அபராதம் செலுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இது தொடர்பாக அவர்களுக்கு விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதுவே எண்ணிக்கை உயரக் காரணம் என்றார்.