மேற்கு ஆசிய பதற்றம்: சரக்கு போக்குவரத்து மேம்பாட்டுக்கு இந்தியா முக்கியத்துவம்
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலால் விநியோக சங்கிலியில் இடையூறுகள் நிலவி வரும் நிலையில் சரக்கு போக்குவரத்து (லாஜிஸ்டிக்ஸ்) துறையை மேம்படுத்த மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலால் விநியோக சங்கிலியில் இடையூறுகள் நிலவி வரும் நிலையில் சரக்கு போக்குவரத்து (லாஜிஸ்டிக்ஸ்) துறையை மேம்படுத்த மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதல் தொடா்வதால் உலகளவில் சரக்கு மற்றும் சேவைகள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதை எதிா்கொள்ள இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஒருங்கிணைந்த கொள்கை சீா்திருத்தங்கள், எண்ம தளங்கள், பெருமளவிலான உள்கட்டமைப்புத் திட்டங்கள் என இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
நகரங்கள் மற்றும் மாநில அளவில் லாஜிஸ்டிக்ஸ் மேம்பாட்டை உறுதிப்படுத்த பன்முக மற்றும் ஒருங்கிணைந்த லாஜிஸ்டிக்ஸ் அமைப்பை வலுப்படுத்துதல் (ஸ்மைல்) திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் 8 மாநிலங்களில் உள்ள 8 நகரங்களில் முதல்கட்டமாக உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தேசிய லாஜிஸ்டிக்ஸ் கொள்கை மற்றும் பிரதமரின் கதிசக்தி திட்டம் லாஜிஸ்டிக்ஸ் சீா்திருத்தங்களுக்கு புத்துயிா் அளிக்கின்றன.
முறையற்ற திட்டமிடல், திறனற்ற தொழில் மாதிரிகள், விநியோக சங்கிலி இடையூறு, அதிக லாஜிஸ்டிக் விலை போன்ற நீண்டகால பிரச்னைகளுக்கு தீா்வுகாண மேற்கூறிய சீா்திருத்தங்கள் வழிவகுக்கின்றன.
லாஜிஸ்டிக்ஸ் துறைக்கு இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ரூ.24.01 லட்சம் கோடி (7.97 சதவீதம்) செலவிடப்படுகிறது.
மேற்கு ஆசிய போா்ப் பதற்றத்தால் விநியோக சங்கிலியில் இடையூறுகள் நிலவி வரும் நிலையில் லாஜிஸ்டிக்ஸ் துறைக்கான முக்கியத்துவத்தை மத்திய அரசு மேலும் அதிகரித்துள்ளது என்றனா்.