முகப்பு
இந்தியா

மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்பு!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக அடுத்தடுத்து விமானங்கள் ரத்து செய்யப்படுவதால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணிகளுக்கு விசா நீட்டிக்கப்படும் என்று இந்தியா உறுதியளித்துள்ளது.

Updated On : 2 மார்ச், 2026 at 2:53 AM
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 10:30 PM

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக அடுத்தடுத்து விமானங்கள் ரத்து செய்யப்படுவதால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணிகளுக்கு விசா நீட்டிக்கப்படும் என்று இந்தியா உறுதியளித்துள்ளது.

ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க மோதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. இதனால் பல விமான நிறுவனங்கள் தங்களது விமான சேவையை ரத்து செய்து வருகின்றன. இதனால் இந்தியா வந்த வெளிநாட்டு பயணிகள் மீண்டும் தங்களது நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் நிலவுகிறது.

இதைக் கருத்தில்கொண்டு இந்திய வெளியுறவு அமைச்சகம் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘மேற்காசிய பிராந்திய நிலவரத்தால் பயணத் திட்டத்தை மாற்றியுள்ள இந்தியாவுக்கு வந்துள்ள வெளிநாட்டு பயணிகள், விசா காலத்தை நீட்டிக்க அல்லது இந்தியாவில் தங்குவதற்கு அனுமதி பெற விரும்பினால், அருகிலுள்ள வெளிநாட்டு பயணிகள் பிராந்திய பதிவு அலுவலகத்தை அணுகலாம். அவா்களுக்குத் தேவையான உதவிகள் அங்கு அளிக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இருப்பினும், இந்தியாவில் எத்தனை வெளிநாட்டு பயணிகள் தற்போது உள்ளனா், அவா்களில் எத்தனை போ் விமான ரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்ற விவரம் தெரியவில்லை.

225 விமானங்கள் ரத்து: இதனிடையே, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக, தில்லியில் 100 விமானங்களும், மும்பையில் 125 விமானங்களும் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல வேண்டிய விமானங்கள் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தரப்பில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் மொத்தம் 444 சா்வதேச விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என எதிா்பாா்ப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.