சென்னை

எம்.பி.பி.எஸ்.சீட் வாங்கித் தருவதாக ரூ. 2 கோடி மோசடி:தருமபுரி இளைஞர் கைது

DIN

எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்ததாக, தருமபுரியைச் சேர்ந்த இளைஞரை சென்னை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை எழும்பூரைச் சேர்ந்தவர் உ.அனிதா. இவர் தனது மகனை எம்.பி.பி.எஸ். படிக்க வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார். அப்போது தருமபுரி ஆசிரியர் காலனியைச் சேர்ந்த ரா.ராஜேஸ்வரன் (37) மகாராஷ்டிர மாநிலம், புனேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாக ஒரு நாளிதழில் விளம்பரம் செய்திருந்தார். அந்த விளம்பரத்தை பார்த்த அனிதா, ராஜேஸ்வரனை தொடர்புக் கொண்டார்.
உடனே ராஜேஸ்வரன், எம்.பி.பி.எஸ். சீட் பெற்றுத் தருவதற்கு ரூ.35 லட்சம் தரும்படி அனிதாவிடம் கேட்டாராம். அவரது பேச்சை நம்பிய அனிதா, ரூ.35 லட்சத்தை ராஜேஸ்வரனிடம் கொடுத்தாராம். பணத்தை பெற்றுக் கொண்ட ராஜேஸ்வரன், எம்.பி.பி.எஸ். சீட்டு பெற்றுக் கொடுக்காததோடு, பணத்தையும் திருப்பித் தரவில்லையாம்.
இதனால் ஏமாற்றமடைந்த அனிதா, சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் ராஜேஸ்வரன் மீது புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ராஜேஸ்வரனை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்ட ராஜேஸ்வரன், எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாக 7 பேரிடம் சுமார் ரூ.2 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

SCROLL FOR NEXT