சென்னை

கே.கே.நகரில் : சைக்கிள் பாதையைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

DIN

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட கே.கே.நகரில் உள்ள சைக்கிள் பாதையை ஆக்கிரமித்து கட்டுமானப் பொருள்கள் கொட்டப்படுவதாலும், வாகனங்களை நிறுத்துவதாலும் அப்பாதையை மாணவர்களும், பொதுமக்களும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், சாலையோரங்களில் சைக்கிளில் செல்வதற்கென தனி பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதை முதலில் மாதிரித் திட்டமாக கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ள அண்ணா நகர் மண்டலம், கோடம்பாக்கம் மண்டலம் கே.கே.நகர் பகுதியில் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டனர்.
அண்ணா நகரில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதை அடுத்து அப்பகுதியில் சைக்கிள் பாதை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. 
கோடம்பாக்கம் மண்டலம், கே.கே. நகருக்கு உள்பட்ட பி.டி.ராஜன் சாலை, லட்சுமி நாராயணன் சாலை, ராமசாமி சாலை, ஆர்.கே.சண்முகராஜன் சாலை ஆகியவற்றில் 3.8 கி.மீ. நீளத்துக்கு சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 2017 -இல் சைக்கிள் பாதை அமைக்கப்பட்டது.
ஆக்கிரமிப்புகள்: தொடக்க காலத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர், உடற்பயிற்சிக்காக சைக்கிள் ஓட்டும் பொதுமக்கள் இப்பாதையைப் பயன்படுத்தி வந்தனர். 
இந்நிலையில், இந்தப் பாதையில் சிலர் கட்டுமானப் பொருள்களையும், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தத் தொடங்கியதால், இந்தப் பாதையை மாணவர்களும், பொதுமக்களும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர் நடவடிக்கை வேண்டும்: இதுகுறித்து கே.கே. நகர் ராமசாமி சாலையில் வசிக்கும் ஜெ.ஹரிஹரன் என்பவர் கூறியது: பி.டி.ராஜன் சாலையில் உள்ள சிவன் பூங்காவுக்கு வருவோரும், இப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோரும் சைக்கிள் பாதையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்களையும், நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்துகின்றனர். மேலும், இப்பகுதியில் கட்டடம் கட்டுவோர் கட்டுமானத்துக்குத் தேவைப்படும் செங்கல், மணல், ஜல்லிக்கற்களை இந்தப் பாதையில்தான் கொட்டி வைக்கின்றனர்.
இதனால், மாணவர்கள் சைக்கிள் பாதையை உபயோகப்படுத்த முடியாமல், வாகனங்கள் செல்லும் சாலையை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு செல்லும்போது, மாணவர்கள் விபத்துக்குள்ளாகும் நிலையும் ஏற்படுகிறது.
எனவே, சைக்கிள் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக நீக்க காவல் துறையுடன் இணைந்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதோடு, எதிர்காலத்தில் எந்த வகையிலும் இப்பாதையை யாரும் ஆக்கிரமிக்காத அளவுக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.
தொடர் கண்காணிப்பு: இதுகுறித்து கோடம்பாக்கம் மண்டல அதிகாரி ஒருவர் கூறும்போது , கே.கே.நகர் சைக்கிள் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். 
இந்தப் பாதையில் ஆக்கிரமிப்புகள் இருக்கக் கூடாது என கட்டட உரிமையாளர்கள், தனியார் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். அதையும் மீறி வாகனங்களை நிறுத்துவோருக்கும், கட்டுமானப் பொருள்களைக் கொட்டுவோருக்கும் ரூ. 1,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இனிவரும் நாள்களில் காலை, மாலை நேரங்களில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்' என்றார் அவர்.

ஆர்.கே.சண்முகம் சாலையில் சைக்கிள் ஓட்டும் பாதை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT