10 வயது சிறுவன் கடத்திக் கொலை: பக்கத்து வீட்டு இளைஞர் கைது
சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் தாயின் தகாத உறவு காரணமாக 10 வயது மகன் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பக்கத்து வீட்டு இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் தாயின் தகாத உறவு காரணமாக 10 வயது மகன் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பக்கத்து வீட்டு இளைஞர் கைது செய்யப்பட்டார்.
எம்.ஜி.ஆர். நகர், நெசப்பாக்கம் அருகே உள்ள பாரதிநகர், ஏழுமலை தெருவைச் சேர்ந்தவர் சு.கார்த்திகேயன் (38). இவர் வீடு மற்றும் கடைகளுக்கு, உள் அலங்காரம் செய்துக் கொடுக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (42) அண்ணா சாலையில் உள்ள மின் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார்.
மஞ்சுளாவின் முதல் கணவர் மின்வாரியத்தில் பணிபுரிந்து வந்தபோது இறந்துவிட்டார். அதனால் கருணை அடிப்படையில் மஞ்சுளாவுக்கு மின்வாரியத்தில் வேலை கிடைத்தது. அத்துடன் முதல் கணவர் மூலம் மஞ்சுளாவுக்கு பிறந்த மகள், அவரது பெற்றோர் வீட்டில் வளர்க்கப்பட்டு வருகிறார். இந்நிலையில், முதல் கணவரை இழந்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சுளாவும், கார்த்திகேயனும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு பிறந்த மகன் ரித்தேஷ்சாய் (10) அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
ரித்தேஷ்சாய் ராமாபுரம் ஜெய்பாலாஜி நகரில் பொம்மி என்ற ஆசிரியையிடம் ஹிந்தி டியூசன் படிக்க புதன்கிழமை சென்றார். அன்று இரவு 7 மணியளவில் ரித்தேஷ்சாயை அழைப்பதற்காக கார்த்திகேயன் சென்றபோது, குடும்ப நண்பரும், கார்த்திகேயன் வீட்டின் அருகே வசிப்பவருமான நாகராஜ் (27) என்பவர் ரித்தேஷ்சாயை அழைத்துச் சென்றுவிட்டதாக தெரிவித்தார்.
காவல் நிலையத்தில் புகார்: இதையடுத்து கார்த்திகேயன், நாகராஜை செல்லிடப்பேசி மூலம் தொடர்புக் கொள்ள முயன்றாராம். நாகராஜ் செல்லிடப்பேசியை எடுத்து பேசவில்லையாம்.
இதையடுத்து எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் கார்த்திகேயன் புகார் தெரிவித்தார். அதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் வேலூரில் தலைமறைவாக இருந்த நாகராஜை போலீஸார் நள்ளிரவு கைது செய்து விசாரணை செய்தனர்.
சிறுவன் கொலை: அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரித்தேஷ்சாயை சேலையூர் ஐ.ஏ.எப். சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அலுவலக அறையில் மதுப்பாட்டிலால் கழுத்தில் குத்தியும், இரும்பு கம்பியால் அடித்தும் கொலை செய்துவிட்டு நாகராஜ் தலைமறைவானது தெரியவந்தது. அவரது தகவலின்பேரில், கொலை சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், ரித்தேஷ்சாய் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
தவறான உறவு: நாகராஜிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், நாகராஜுக்கும், மஞ்சுளாவுக்கும் இருந்து வந்த தவறான உறவே சிறுவனின் கொலை வரை சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறியது: வளசரவாக்கத்தில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்த நாகராஜ், கார்த்திகேயன் வீட்டின் அருகே குடியிருந்துள்ளார். அவர் கார்த்திகேயனுடன் நண்பராக பழகியுள்ளார். இந்த பழக்கத்தில் நாகராஜுக்கும், மஞ்சுளாவுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் மஞ்சுளா, அவ்வப்போது நாகராஜுக்கு செலவுக்கு பணம் கொடுப்பாராம். இவர்களின் தவறான உறவை அறிந்த கார்த்திகேயன், மஞ்சுளாவையும், நாகராஜையும் கண்டித்துள்ளார். அதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் நாகராஜ் மீது 3 முறை புகார் தெரிவித்துள்ளார். இதில் இரு முறை நாகராஜ் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு வழக்கு மஞ்சுளா கேட்டுக் கொண்டதால் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இப் பிரச்னையில் மஞ்சுளா, தனது கணவரை பிரிந்து சிறிது காலம் இருந்துள்ளார். உறவினர்கள், நண்பர்கள் சமாதானம் செய்து கணவன்-மனைவியை இணைத்து வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து நாகராஜுடன் இருந்த உறவை மஞ்சுளா துண்டித்துள்ளார்.
பழிவாங்க திட்டம்: இதனால் நாகராஜுக்கு மஞ்சுளா மீது கோபம் ஏற்பட்டுள்ளது. கார்த்திகேயன் தன் மீது வழக்குப் பதிந்து, சிறையில் தள்ளியதால் அவரையும் பழிவாங்கவும் நாகராஜ் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், ரித்தேஷ்சாயை ஹிந்தி டியூசன் வகுப்பில் இருந்து புதன்கிழமை ஏமாற்றி கடத்திச் சென்றுள்ளார். ரித்தேஷ்சாயை வழக்கமாக நாகராஜ் வந்து வீட்டுக்கு அழைத்துச் செல்வார் என்பதால் அவர் மீது டியூசன் வகுப்பு நடத்தியவருக்கு சந்தேகம் ஏற்படவில்லை.
பணம் கேட்டு மிரட்டல்: இதன் பின்னர் மஞ்சுளாவை செல்லிடப்பேசி மூலம் தொடர்புக் கொண்ட நாகராஜ், தனது அலுவலகம் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு ரூ.3 லட்சத்துடன் வரும்படி மிரட்டியுள்ளார். அதற்கு மஞ்சுளா மறுப்பு தெரிவித்ததோடு, தனது கணவர், காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், ரித்தேஷ்சாயை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார் என்றனர் போலீஸார். இச்சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து மஞ்சுளாவிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.