12 பெட்டிகளைக் கொண்ட புறநகர் மின்சார ரயில்: அரக்கோணம் வரை நீட்டிக்க பரிசீலனை
அரக்கோணம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் சென்னையிலிருந்து ஆவடி, திருவள்ளூருக்கு இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவையை அரக்கோணம் வரை நீட்டிக்க தெற்கு ரயில்வே
அரக்கோணம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் சென்னையிலிருந்து ஆவடி, திருவள்ளூருக்கு இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவையை அரக்கோணம் வரை நீட்டிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வேயின் சென்னைக் கோட்ட உயரதிகாரிகள் கூறியது: அரக்கோணம் ரயில் நிலையத்தில் நடைமேடை அமைக்கும் பணி உள்பட மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன. குறிப்பாக அரக்கோணத்தில் 12 பெட்டிகளைக் கொண்ட புறநகர் மின்சார ரயில் நிற்க ஏதுவாக நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. எனவே ஆவடி, திருவள்ளூருக்கு இயக்கப்படும் 12 பெட்டிகளைக் கொண்ட புறநகர் மின்சார ரயில்களின் சேவையை அரக்கோணம் வரை நீட்டிக்க பரிசீலித்து வருகிறோம்.
இந்த வழித்தடத்தில் நாள்தோறும் 119 மின்சார ரயில் சேவை வழங்கப்படுவதால் ஆண்டுதோறும் பல லட்சம் பயணிகள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இச்சேவை நீட்டிக்கப்பட்டால் கூடுதலாக பயணிகள் பயன்பெறுவர்.
இது குறித்து உயரதிகாரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டு ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் இந்த ரயில் சேவை அரக்கோணம் வரை நீட்டிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தார்.