முகப்பு
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் எம்.வி. ரஃப்பல்ஸ் குவெ என்ற கப்பலிலிருந்து புதன்கிழமை இறக்குமதி செய்யப்பட்ட மலேசிய ஆற்று மணல். 
சென்னை

எண்ணூர் துறைமுகத்துக்கு வந்த 52 ஆயிரம் டன் மலேசிய ஆற்று மணல்: நேரடி விற்பனைக்கு தொடர்கிறது வரவேற்பு 

தமிழகத்திற்குத் தேவையான ஆற்றுமணலை வெளிநாடுகளிலிலிருந்து அரசே இறக்குமதி செய்து விற்பனை செய்யும் என தமிழக அரசு அறிவித்த நிலையில் சுமார் 52 ஆயிரம்

சென்னை

எண்ணூர் துறைமுகத்துக்கு வந்த 52 ஆயிரம் டன் மலேசிய ஆற்று மணல்: நேரடி விற்பனைக்கு தொடர்கிறது வரவேற்பு 

தமிழகத்திற்குத் தேவையான ஆற்றுமணலை வெளிநாடுகளிலிலிருந்து அரசே இறக்குமதி செய்து விற்பனை செய்யும் என தமிழக அரசு அறிவித்த நிலையில் சுமார் 52 ஆயிரம்

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:41 PM
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் எம்.வி. ரஃப்பல்ஸ் குவெ என்ற கப்பலிலிருந்து புதன்கிழமை இறக்குமதி செய்யப்பட்ட மலேசிய ஆற்று மணல். 
பகிர்:


தமிழகத்திற்குத் தேவையான ஆற்றுமணலை வெளிநாடுகளிலிலிருந்து அரசே இறக்குமதி செய்து விற்பனை செய்யும் என தமிழக அரசு அறிவித்த நிலையில் சுமார் 52 ஆயிரம் மெட்ரிக் டன் ஆற்று மணல் ஏற்றிய கப்பல் புதன்கிழமை எண்ணூர் துறைமுகம் வந்தடைந்தது. இத்துறைமுகத்திற்கு வரும் இரண்டாவது ஆற்று மணல் கப்பல் இது. 
புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆர்.எம்.ஆர். ராமையா எண்டர்பிரைசஸ் வெளிநாட்டிலிருந்து கடந்த 2017 அக்டோபரில் சுமார் 55 ஆயிரம் டன் ஆற்று மணலை தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்தது. மணலை விற்கும் முயற்சியில் ஈடுபட்டபோது விற்பனைக்குத் தமிழக அரசு தடைவிதித்தது. 
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதியில் உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்நிறுவனம் இறக்குமதி செய்த ஆற்று மணலை தமிழக அரசு விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. 
இதனையடுத்து மணல் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் வகையில் தேவை ஏற்பட்டால் வெளிநாடுகளிலிருந்து ஆற்று மணலை அரசே இறக்குமதி செய்து பொதுப்பணித் துறை மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும் என தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து வெளிநாடுகளிலிருந்து ஆற்றுமணலை தனியார் நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்து பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்க டெண்டர் விடப்பட்டது. இதில் ஹைதராபாத் மதன்பூரைச் சேர்ந்த இன்ரிதம் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மணல் இறக்குமதி செய்து ஒப்படைக்க தேர்வு செய்யப்பட்டது. முதல் கட்டமாக சுமார் 3 லட்சம் மெட்ரிக் டன் ஆற்றுமணலை இறக்குமதி செய்ய கொள்முதல் உத்தரவு இந்நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது. 
முதல் கப்பல் வருகையும் விற்பனையும் : இதனையடுத்து மலேசியாவிலிருந்து 56,750 மெட்ரிக் டன் ஆற்று மணல் கடந்த செப். 21-ம் தேதி எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு எம்.வி.ஆரலியா என்ற சரக்குக் கப்பல் மூலம் வந்தது. இங்குள்ள செட்டிநாடு பல்சரக்கு முனையத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் அனைத்தும் துறைமுக வளாகத்தில் இருப்பு வைக்கப்பட்டு பொதுப்பணித்துறை மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒரு யூனிட் மணல் (சுமார் 4.5 டன்) விலை ரூ. 10,350 என்ற விலையில் ( ) என்ற இணையதளத்தின் மூலம் விற்பனை தொடங்கியது. 
முதலில் சற்று மந்தமாகத் தொடங்கிய விற்பனை பிறகு படிப்படியாகச் சூடுபிடித்தது. இறக்குமதி செய்யப்பட்ட மணல் சுமார் ஒன்றரை மாதத்திற்குள்ளாகவே விற்பனையாகிவிட்டதால் மீண்டும் ஆற்று மணலை இறக்குமதி செய்யும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டது. 
இரண்டாவது கப்பலில் வந்த 52 ஆயிரம் டன் மணல்: இந்நிலையில் 52,068 மெட்ரிக் டன் ஆற்று மணலை ஏற்றிய நிலையில் மலேசியாவிலிருந்து எம்.வி ரஃப்பல்ஸ் குவே என்ற கப்பல் புதன்கிழமை அதிகாலை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் உள்ள செட்டிநாடு பல்துறை சரக்கு முனையத்திற்கு வந்தடைந்தது. மணலை கப்பலிலிருந்து இறக்கும் பணி தொடங்கியது. இரண்டு நாள்களில் மணலை இறக்கும் பணி நிறைவடையும் என எதிர்பார்த்த நிலையில் கடல் சற்று கொந்தளிப்புடன் காணப்படுவதால் இப்பணி மேலும் ஒரு நாள் நீடிக்கும் என கூறப்படுகிறது. 
இந்நிலையில் கடந்த முறைபோல் பொதுமக்களுக்கு நேரடியாக விற்கும் நடவடிக்கைகளில் பொதுப்பணித்துறை ஈடுபட்டுள்ளது. () என்ற இணையதளத்தில் பதிவு செய்யும் பொதுமக்கள், நிறுவனங்கள் மணல் விலைக்கான தொகையைச் செலுத்திய பிறகு தாங்களே லாரிகளை ஏற்பாடு செய்து கொண்டு மணலை எடுத்துச் செல்லலாம் எனவும், இது குறித்த சந்தேகங்களுக்கு : 95662 22479, 99404 98760 மின்னஞ்சல்: ( )-யை தொடர்பு கொள்ளலாம் என பொதுப்பணித் துறை மீண்டும் அறிவித்துள்ளது. 
சென்னையில் வரவேற்பும் தூத்துக்குடியில் மந்தமும்: காரணங்கள் என்ன? 
பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப நேரடியாக மணல் விற்பனை செய்ய தனி இணையதளத்தைத் தொடங்கிய பொதுப்பணித் துறை முதலில் தூத்துக்குடியில் நேரடி விற்பனையைத் தொடங்கியது. பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் தொடங்கியது. இதில் எண்ணூர் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் அனைத்தும் சுமார் ஒன்றரை மாதங்களுக்குள்ளாகவே விற்பனை செய்யப்பட்டு இரண்டாவது கப்பலும் வந்துவிட்டது. ஆனால் தூத்துக்குடியில் மணலை விற்கத் தொடங்கி சுமார் நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை ஏறக்குறைய பாதியளவுக்குத்தான் மணல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 
இதற்கு, தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட மணலை கேரளா மாநிலப் பகுதிகளுக்கு விற்பனை செய்வதுதான் தனியார் நிறுவனத்தின் திட்டமாக இருந்தது. ஆனால் மணல் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டதால் தூத்துக்குடிக்கு வந்த இரண்டாவது மணல் கப்பல் நேரடியாக கொச்சி துறைமுகத்திற்குச் சென்றுவிட்டது. மேலும் தொடர்ச்சியாக வெளிநாட்டு மணல் கொச்சி மற்றும் மங்களூரு துறைமுகங்களில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் கேரள மாநிலத்தின் மணல் தேவை குறைந்துவிட்டது. மேலும் சென்னை அளவுக்கு தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு மணலின் தேவை அதிகமாக இருக்கவில்லை என்பதும் முக்கிய காரணிகளாக உள்ளன என்றார் சென்னையைச் சேர்ந்த கட்டுமானத்துறை பொறியாளர் ஒருவர்.

முழு கட்டுரையைப் படிக்க →