சென்னை

தொடர் விடுமுறை: 1,500 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

DIN

தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏப்.17 அன்று வழக்கத்தை விட கூடுதலாக 1,500 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
 மஹாவீர் ஜெயந்தி, தேர்தல் நாள், புனித வெள்ளி என தொடர்ந்து 5 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செவ்வாய்க்கிழமை (ஏப்.16) முதல் புறப்படத் தொடங்கி விட்டனர். இதனால் அதிகரிக்கும் கூட்ட நெரிசலைத் தடுக்கும் வகையில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் 8 போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் வழக்கத்தை விட கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 இதனடிப்படையில், செவ்வாய்க்கிழமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 850 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழகம் முழுவதிலும் இருந்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து செவ்வாய்க்கிழமை தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இந்நிலையில் சென்னையில் இருந்து மட்டும் 6,500-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து தங்கள் ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இதே போல் ஏப்.17 அன்றும் தமிழகம் முழுவதும் 1,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அன்றைய தினம் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 13,500 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 தொடர் கண்காணிப்பில் தனியார் பேருந்துகள்: தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக கிடைத்த புகாரை அடுத்து, அதனைத் தடுக்கும் வகையில் சிறப்புக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறையினர் முன்னரே தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழு குறித்து அதிகாரி ஒருவர் கூறியது: கூடுதல் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பேருந்துகளைக் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவானது, தேர்தல் நாளான ஏப்ரல் 18 ஆம் தேதியைத் தவிர்த்து ஏப்.16 முதல் 22 ஆம் தேதி வரை தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் 1 வட்டாரப் போக்குவரத்து அலுவலர், 3 போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் உள்பட 4 பேர், முக்கியப் பேருந்து நிலையங்களில் காலை மற்றும் இரவு வேலைகளில் சோதனை செய்கின்றனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT