சென்னை

27 ஆண்டுகளில் 900-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் சடலங்களை அடக்கம் செய்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர்

DIN



கடந்த 27 ஆண்டுகளாக ஆதரவற்ற நிலையில் இறந்த சுமார் 900-க்கும் மேற்பட்ட சடலங்களை அடக்கம் செய்துள்ளார் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன்.
 திருவள்ளூர் மாவட்டம்,  பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயம்மாள் - ராதாகிருஷ்ணன் தம்பதியினரின் மகன் சீனிவாசன்.  ராதாகிருஷ்ணன் போக்குவரத்து துறையில் ஓட்டுநர். உடல்நிலை சரியில்லாததால் பணிக்குச் செல்லவில்லை. இதனால் வீட்டில் வறுமை தாண்டவமாடியது.
  கடந்த 1967-இல்  ஜெயம்மாள் இறந்தபோது  வறுமையால் அவருடைய ஈமக் காரியங்களை சீனிவாசனால் செய்ய முடியவில்லை. உறவினர்களும் உதவ முன்வரவில்லை. இதனால் இரண்டு நாள்கள் கழித்து அடக்கம் செய்தனர். தந்தை ராதாகிருஷ்ணனும் சிறிது காலத்தில் இறந்தார்.
தந்தைக்கு ஈமகாரியங்கள் செய்வதற்கும் பணமின்றி சீனிவாசன் தவித்துள்ளார். இந்த சம்பவங்கள் அவரை வெகுவாக பாதித்தன.
ஏழைகளுக்கு உதவ... இதனால், வறுமையில் வாடும் ஏழைக் குடும்பத்தினரின் ஈமக்காரியங்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் சீனிவாசனுக்கு உதித்தது.
 அதையடுத்து ஆதரவற்றோரின் சடலங்களை இந்து முறைப்படி அடக்கம் செய்யத் தொடங்கினார்.  அத்துடன் ஆதரவற்ற,  மனநிலை குன்றிய நிலையில்  உணவில்லாமல் தவித்து வருவோருக்கும் தினமும் உணவளிக்கும் பணியைக் கடந்த 1992 முதல் தொடங்கினார்.
ஈமகாரிய செலவு: ஆதரவற்ற நபர்கள் உயிரிழந்தால் அடக்கம் செய்ய ஆகும் ரூ.1500-இல் இருந்து ரூ.2,000 வரையான செலவையும்,  ஒரு வாரம் கழித்து நடக்கும் காரியத்துக்கான செலவு ரூ.300ஐயும் சீனிவாசன் ஏற்றுக் கொள்கிறார். 
 மேலும்  காசி சென்று இறந்தவர்கள் அனைவருக்கும் சேர்த்து பிண்டம் வைத்து மோட்சம் அடையச் செய்ய பிரார்த்தனையும் செய்து வருகிறார்.  
சீனிவாசனின் இந்த செயலைக் கண்டு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி அவருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
இதுகுறித்து ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வர் சீனிவாசன் (70) கூறியதாவது: 
எனது தாய், தந்தை இறப்பும், அதனால் ஏற்பட்ட மனவேதனையுமே என்னை இச் சேவையைச் செய்ய உந்துதலை ஏற்படுத்தியது. அதன்படி, கடந்த 1992 முதல் இதவரை சுமார் 900 ஆயிரம் பேருக்கு மேல் இறுதிச்சடங்கு செய்துள்ளேன். 
 பசியுடன் இருக்கும்  ஆதரவற்றோருக்காக தினமும் 100 பேர் வரை உணவளித்தும் வருவதாகக் கூறினார்.
குடும்பத்தினரின் ஒத்துழைப்பு சீனிவாசனுக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர். மகன்கள் பணியில் இருக்கின்றனர். காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே கணபதி நகரில் வசித்து வரும் சீனிவாசனுக்கு குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகக் கூறினார்.
முதன் முதலில்...
முதன் முதலில் செங்கல்பட்டு பகுதியில் உடல்நலக்குறைவால் இறந்த பிச்சைக்காரருக்கு 1992-இல் சீனிவாசன் ஈமகாரியம் செய்தாராம்.  2006-ஆம் ஆண்டில் காவல்  உதவி ஆய்வாளராக ஓய்வு பெற்ற பின் கிடைக்கும் ஓய்வூதியம்  ரூ.16,500-ஐயும் இதற்காகவே செலவு செய்வதாகத் தெரிவித்தார் சீனிவாசன். இதற்காக இதுவரை யாரிடமும் எவ்வித நிதியும் பெற்றதில்லையாம்.
 இதுவரை 21 முறை காசி சென்று இறந்தவர்கள் மீண்டும் பிறவாமலிருக்க வேண்டி பூஜை செய்து வரும் சீனிவாசன் இறப்பவர்களின் ஜாதி, மதச் சடங்களுக்கு ஏற்பத்தான் ஈம காரியங்களைச் செல்வதாகக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT