சென்னை

சிடி ஸ்கேன், குளூக்கோ மீட்டர் பாதிப்பு நிறைந்த மருத்துவ சாதனங்களாக அறிவிப்பு

DIN


சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், குளூக்கோ மீட்டர் உள்ளிட்ட 9 வகையான மருத்துவ சாதனங்களை பாதிப்பு மிகுந்த உபகரணங்களாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் வகைப்படுத்தியுள்ளது. 
அந்த சாதனங்களைத் தொடர்ந்து பயன்படுத்தும் பட்சத்தில் நோயாளிகளுக்கும், ஆய்வக உதவியாளர்களுக்கும் பல்வேறு பக்க விளைவுகளை உண்டாக்கும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த வகைப்பாடுகள் உள்ளதாக சுகாதார ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய மருந்து தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் மருத்துவ சாதனங்களின் தரத்தையும், விலையையும் ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்பது அவசியம். 
ஆனால், மத்திய சுகாதாரத் துறை தகவல்களின்படி, நாட்டில் உள்ள மருத்துவ உபகரணங்களில் 80 சதவீதம் ஒழுங்குமுறைப்படுத்தப்படாமல் உள்ளதாகத் தெரிகிறது. இதனால் பல்வேறு எதிர் விளைவுகள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில், ஒழுங்குமுறைப்படுத்தப்படாமல் இருக்கும் பல மருத்துவ உபகரணங்களை தரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. 
அதன்படி, அவற்றின் விற்பனை மற்றும் தரத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக 754 சிறப்பு அதிகாரிகளைப் பணியமர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது ஒருபுறமிருக்க, மருத்துவ சாதனங்களால் ஏற்படும் பாதிப்புகளைப் பொருத்து அவற்றை மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம்  வகைப்படுத்துவது வழக்கம். 
அவ்வாறு 300-க்கும் மேற்பட்ட சாதனங்கள் இதுவரை வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், 12 மருத்துவ உபகரணங்களின் பாதுகாப்பு மற்றும் பாதிப்பு குறித்த விவரங்கள் சில நாள்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன.
அதில், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், நுரையீரலுக்கு சுவாசக் காற்றை அனுப்பும் கருவிகள், எக்ஸ்-ரே கருவி, புற்றுநோய் சிகிச்சைக்கான பிஇடி கருவி, இதயத் துடிப்பை மீட்டெடுக்கும் மின்னழுத்தக் கருவி, சர்க்கரை அளவைப் பரிசோதிக்கும் குளூக்கோ மீட்டர், டயாலிசிஸ் இயந்திரங்கள், உடலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட உறுப்புகளை பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனம் ஆகியவை பாதிப்பு நிறைந்தவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தெர்மோமீட்டர், ரத்த அழுத்த பரிசோதனை கருவி, எலும்பு மஜ்ஜை செல்களை பிரிக்கும் சாதனம் ஆகியவை சற்று பாதிப்பு குறைந்தவைகளாக அதில் வரையறுக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT