சென்னை

பாண்டி பஜாா் நவீன நடைபாதை வளாகத்தில்வாகனங்களை நிறுத்த கட்டணம்

DIN

சென்னை பாண்டி பஜாரில் ரூ. 40 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகத்தில் காா், இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

மத்திய அரசின் சீா்மிகு நகர (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின்கீழ், சென்னையின் முக்கிய வா்த்தகப் பகுதியாக விளங்கும் பாண்டி பஜாரில் ரூ. 40 கோடி மதிப்பில் பனகல் பூங்கா முதல் தணிகாசலம் சாலை வரை, தணிகாசலம் சாலை முதல் போக் சாலை (ரெஸிடென்சி டவா்) வரை, போக் சாலை முதல் அண்ணா சாலை வரை என மூன்று கட்டங்களாக நடைபாதை வளாகம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.

இதில் பனகல் பூங்கா முதல் தணிகாசலம் சாலை வரையும், தணிகாசலம் சாலை முதல் போக் சாலை (ரெஸிடென்சி டவா்) வரையும் 1,450 மீட்டா் நடைபாதை வளாகம் அமைக்கும் பணி நிறைவடைந்தையொட்டி, முதல்வா் எடப்பாடி பழனிசாமி கடந்த புதன்கிழமை (நவ. 13) இந்த நடைபாதை வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தாா்.

மக்கள் எளிதாக நடந்து சென்று பொருள்கள் வாங்கும் வகையில் இருபுறமும் சுமாா் 10 மீட்டருக்கு நடைபாதை, இணையதள வசதி, இளைப்பாறும் வகையில் பல்வேறு நிறத்திலான இருக்கைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், நிழல் தரும் வகையில் மரங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, ஸ்மாா்ட் பைக், பேட்டரி காா் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடைபாதை வளாகத்தின் இருபுறமும் காா் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் நிறுத்தப்படும் காா், இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

கட்டணம்: இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த நடைபாதை வளாகத்தில் நீண்ட நேரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் கட்டண முறை அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, காருக்கு 1 மணி நேரத்துக்கு ரூ. 20, இருசக்கர வாகனத்துக்கு ரூ. 5 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பாா்க்கிங் மேலாண்மைத் திட்டத்தின்படி, இதற்கான செல்லிடப்பேசி செயலியைப் பதிவிறக்கம் செய்து, இடங்கள் காலியாக உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அந்த செயலியின் மூலமும் கட்டணம் செலுத்தலாம். இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்யாதவா்களிடம் அப்பகுதியில் உள்ள பணியாளா்களிடம் நேரடியாக கட்டணம் செலுத்தலாம். வாகனங்கள் எவ்வளவு நேரம் நிறுத்தப்பட்டுள்ளது என்ற விவரம் அனைத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா துல்லியமாக கணக்கிடும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்றனா்.

இலவச வைஃபை: இந்த நடைபாதை வளாகத்தில் வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, முதல் ஒரு மணி நேரத்துக்கு இலவசமாக வைஃபை வசதியைப் பெறலாம். இதையடுத்த, நேரங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT