சென்னை

அரசு ஊழியர்களுக்கு பாராட்டுப் பத்திரம்: முதல்முறையாக அண்ணா பயிற்சி நிறுவனத்தில் புதுமை

DIN

திறம்படப் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கி அதனை மற்ற ஊழியர்கள் கண்டு ஊக்கம் பெறும் வகையிலான புதிய முயற்சியை அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனம் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களிலேயே முதல் முறையாக இத்தகைய புதிய முன் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாராட்டுச் சுவர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய முயற்சியால் ஊழியர்களிடையே பணித் திறன்கள் அதிகரித்துள்ளதாக பயிற்சி மையத்தின் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை பசுமை வழிச்சாலையில் செயல்பட்டு வரும் அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையமானது, கடந்த 1981-ஆம் ஆண்டு முதல் அரசுத் துறை ஊழியர்களுக்கு பல்வேறு வகையான பயிற்சிகளை அளித்து வருகிறது. அமைச்சுப் பணியாளர்கள் முதல் அகில இந்தியப் பணி அலுவலர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் பயிற்சி கொடுக்கப்படுகிறது.

பொது மேலாண்மை பாடத் திட்டம் தவிர, அரசு நிர்வாகம் தொடர்பான பயிற்சிகள், நல் ஆளுமை, வழக்கு மேலாண்மை, தகவல் பெறும் உரிமைச் சட்டம், பாலின விழிப்புணர்வு, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து வகையான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. 

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படும் முன்னணி நிறுவனமான அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனம், இப்போது தனது ஊழியர்களுக்கும் புத்தாக்கம் அளித்து வருகிறது. இதற்கு கையாண்ட உத்திதான் பாராட்டுச் சுவர் திட்டம். 

கடைநிலை ஊழியர்கள் முதல் உயரதிகாரிகள் வரை யார் எந்தப் பணியை ஈடுபாட்டுடன் செய்தாலோ அல்லது குறுகிய காலத்தில் முடித்தாலோ அவர்களது பெயரும், பணித் திறனும் பாராட்டப்பட்டு அது பாராட்டுச் சுவரில் அரங்கேற்றப்பட்டு வருகிறது. பயிற்சி நிறுவனத்தில் கௌரவ பயிற்றுநர்களாக வருவோருக்கு அளிக்கப்படும் மதிப்பூதியத்தை எந்தக் காலதாமதமும் இல்லாமல் வழங்கியதற்காக கணக்குகள் பிரிவு கண்காணிப்பாளர் ஆர்.நந்தினிக்கு, பாராட்டுத் தெரிவித்துள்ளார் அவரது உயரதிகாரியான இணை இயக்குநர் எஸ்.ராஜேந்திரன். 

இதுபோன்று பயிற்சித் திட்டங்கள் சுமுகமான முறையில் நடைபெற ஒத்துழைத்த அலுவலக உதவியாளர் ஏழுமலைக்கும் பாராட்டுத் தெரிவித்து சான்று அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயரதிகாரி முதல் அலுவலக உதவியாளர் வரை எந்தப் பாரபட்சமும் இல்லாமல் பணித் திறனை மட்டுமே கருத்தில் கொண்டு பாராட்டுகள் வழங்கப்படுவதாக அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்தப் புதிய முயற்சி தமிழக அரசு அலுவலகங்களில் வேறு எந்த இடத்திலும் முன்னெடுக்கப்படவில்லை. தனியார் துறைகளில் மட்டுமே ஊழியர்களை ஊக்கப்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். 

இந்தப் புதிய முறை மூலமாக, பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களிடையே பணித் திறன்கள் அதிகரித்துள்ளன என்றனர்.

அரசுத் துறைகளுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனமே, மற்ற அரசுத் துறைகளுக்கும் முன்னுதாரணமாக இருப்பதாக அங்கு பயிற்சியில் ஈடுபட்ட ஊழியர் ஒருவர் பாராட்டுச் சுவருக்கு பாராட்டுத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT