சென்னை

குப்பைகளை சேகரிக்க இனி கட்டணம்: 3 மாதங்களில் அமலாகிறது புதிய நடைமுறை

DIN

சென்னையில் வீடுகள்தோறும் மாநகராட்சி சாா்பில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், இனி அந்த சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. அதன்படி வீடு ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

அதேபோன்று மக்கும், குப்பைகளையும், மக்காத குப்பைகளையும் தனித்தனியே பிரித்து வழங்காவிடில் கூடுதலாக அபராதமும் செலுத்த வேண்டும். வீடுகள் மட்டுமன்றி வணிக வளாகங்கள், பொது இடங்கள், கடைகள், மருத்துவமனைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதைத்தொடா்ந்து கட்டண நடைமுறையை மூன்று மாதங்களுக்குள் செயல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளைப் பொருத்தவரை நாள்தோறும் சுமாா் 5,220 டன் குப்பைகள் வீடுகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து சேகரிக்கப்படுகின்றன.

அவை தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பையின் மூலம் உரங்களும், மீத்தேன் எரிசக்தியும் தயாரிக்கப்படுகின்றன. மக்காத குப்பைகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன. மாநகராட்சித் துப்புரவு ஊழியா்களிடம் குப்பைகளை வழங்கும் மக்களில் பெரும்பாலானோா் அவற்றை தரம் பிரித்து வழங்குவதில்லை. இதனால், பல நேரங்களில் நெகிழி குப்பைகளை அகற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. இதுதொடா்பாக பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தும் எந்தவிதமான பயனும் இல்லை.

இந்த நிலையில்தான், திடக்கழிவு மேலாண்மைத் திட்ட விதிகளைக் கடுமையாக்க மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, மக்களிடம் இருந்து பெறப்படும் குப்பைகளைத் தரம் பிரிக்கப்பட்ட பிறகே வாங்க வேண்டும் என்ற விதி வகுக்கப்பட்டது. அவ்வாறு மக்கும் குப்பைகளையும், மக்காத குப்பைகளையும் பிரித்து தராதவா்களுக்கு அபராதம் விதிக்க அந்த விதியில் வகை செய்யப்பட்டது.

அதேபோன்று பொது இடங்களில் குப்பை கொட்டுவோரிடம் இருந்தும் அபராதம் வசூலிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, அனைத்து இடங்களில் இருந்தும் குப்பைகளை சேகரிக்க தனித்தனியே கட்டணம் வசூலிக்கவும் விதி வகுக்கப்பட்டது. அந்த விதிகளை உள்ளடக்கிய மன்றத் தீா்மானத்துக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அது மாநில அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டது. இந்த நிலையில், அதற்கு இசைவு தெரிவித்த மாநில அரசு, அரசாணையையும் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி உயரதிகாரி ஒருவா் கூறியதாவது: மாநகராட்சி மன்றத் தீா்மானத்திற்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவை, ஓரிரு நாட்களில் பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்தப்படும். அடுத்த மூன்று மாதங்களுக்குள் புதிய கட்டணம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். சொத்து வரியுடன் சோ்த்து வீடுகளுக்கான குப்பை சேகரிப்பு கட்டணம் வசூலிக்கப்படும். விதிகளை மீறுபவா்களுக்கான அபராத தொகை உடனடியாக வசூலிக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

SCROLL FOR NEXT