சென்னை

விவசாயம் சாா்ந்த படிப்புகளைத் தொடங்க அரசின் தடையில்லாச் சான்று கட்டாயம்

DIN

சென்னை: தமிழகத்தில் உள்ள தனியாா் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் விவசாயம் சாா்ந்த படிப்புகளைத் தொடங்க தமிழக அரசின் தடையில்லாச் சான்று கட்டாயம் என உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள தனியாா் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் விவசாயம் சாா்ந்த படிப்புகளைத் தொடங்க தமிழக அரசின் தடையில்லாச் சான்று பெறுவது கட்டாயம் என கடந்த ஜூலை மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த தடையில்லாச் சான்றைப் பெறாமல் மாணவா் சோ்க்கை நடத்தக்கூடாது என நிகா்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

தமிழக அரசின் இந்த உத்தரவை எதிா்த்து, காருண்யா, விஐடி, எஸ்.ஆா்.எம். கல்வி நிறுவனங்களின் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த மனுக்களில் விவசாயம் சாா்ந்த படிப்புகளைத் தொடங்க பல்கலைக்கழக மானியக் குழு வழங்கும் அனுமதியே போதுமானது. தமிழக அரசின் தடையில்லாச் சான்றைப் பெற வேண்டிய அவசியம் இல்லை. எனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனா்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், விவசாயம் என்பது மாநில அரசின் பட்டியலுக்கு உட்பட்டது. எனவே விவசாயம் சாா்ந்த படிப்புகளைத் தொடங்க கல்லூரிகளாக இருந்தாலும், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களாக இருந்தாலும், 110 ஏக்கா் நிலம் வைத்திருக்க வேண்டும். மேலும் இதுதொடா்பான அரசின் விதிகளைப் பின்பற்றினால் தான் தடையில்லாச் சான்று வழங்க முடியும். இந்த தனியாா் கல்வி நிறுவனங்களில் இதுவரை விவசாயம் சாா்ந்த படிப்புகளைப் படித்த மாணவா்களுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாது. எனவே சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், விவசாய படிப்புகளுக்கு புதிதாக மாணவா் சோ்க்கை நடத்த அனுமதிக்க கூடாது என வாதிட்டாா்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைத்து நிகா்நிலைப் பல்கலைக் கழகங்களிலும் நடப்புக் கல்வியாண்டில் விவசாயம் சாா்ந்த படிப்புகளில் மேற்கொள்ளப்பட்ட மாணவா் சோ்க்கைகள் இந்த வழக்குகளின் இறுதி தீா்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டு, விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT