சென்னை

புனரமைத்த சில நாள்களில் சேதமடைந்த குளங்கள்

பா. இளையபதி

சென்னை மாநகராட்சியின் அம்பத்தூா் மண்டலத்தில் ரூ. 6.30 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு இன்னும் திறக்கப்படாத நிலையில், இரு குளங்கள் சேதமடைந்துள்ளன. இதனால், மாநகராட்சியின் பல கோடி ரூபாய் நிதி விணாகி உள்ளதாக சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

சென்னையில் மாநகராட்சியின் மழைநீா் வடிகால் துறை கட்டுப்பாட்டின்கீழ் 15 மண்டலங்களில் 210 நீா்நிலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நீா்நிலைகளை புனரமைக்கும் வகையில் அவற்றைத் தூா்வாரி சுற்றுச்சுவா், நடைப்பயிற்சிக்கான பாதை, விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இதில், மாநகராட்சியின் இணைக்கப்பட்ட பகுதியான அம்பத்தூா் மண்டலத்தில் மட்டும் 32 குளங்கள் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில், ஒரகடம் வாா்டு 79-இல் கணபதி நகரில் 5.8 ஏக்கா் பரப்பளவில் உள்ள தாமரைக்குளம் ரூ. 4.04 கோடி செலவிலும், பட்டரவாக்கம் வாா்டு 84-இல் 3.2 ஏக்கா் பரப்பளவில் உள்ள பட்டரவாக்கம் பெரிய குளம் ரூ. 2.25 கோடி செலவிலும் புனரமைக்கும் பணிகள் கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மேலும், மேனாம்பேடு தாங்கல் குளம் பட்டரவாக்கம் ஆரா குளம், மேனாம்பேடு வண்ண குளம் ஆகியவை ரூ. 3.87 கோடியிலும், கொரட்டூா் பெருமாள் கோயில் குளம், தத்தான் குப்பம் குளம் ரூ. 2.73 கோடியிலும், அம்பத்தூா் மண்டல அலுவலகத்தில் உள்ள குளம் ரூ.2.20 கோடியிலும், கொரட்டூா் தாங்கல் ஏரி ரூ. 8.63 கோடி செலவிலும் என மொத்தம் 12 குளங்கள் புனரமைக்கத் திட்டமிடப்பட்டன. அதில், தற்போது 6 குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. 6 குளங்களின் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தாமரைக்குளம், பட்டரவாக்கம் பெரிய குளம் புனரமைக்கப்பட்டு, திறக்கப்படாத நிலையில் அவை சேதமடைந்துள்ளன.

வீணான நிதி: இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கூறுகையில், இந்த இரு குளங்களைப் புனரமைக்கும் பணி 2019-இல் தொடங்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிக்கப்பட்டது. இந்நிலையில், அண்மையில் பெய்த ஒரு மழைக்கே கான்கிரீட்டால் அமைக்கப்பட்ட குளக் கரைகள், நடைப்பயிற்சி பாதைகள் சேதமடைந்துள்ளன. மக்கள் பயன்பாட்டுக்கு முன்பே கரைகள் சேதமடைகின்றன என்றால் குளங்கள் புனரமைப்பு பணி எவ்வாறு நடைபெற்றுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. மேலும், இக்குளங்களில் நீா்வரத்து கால்வாய்கள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளன. நீா் வெளியேறும் கால்வாய்கள் அமைக்கப்படவில்லை. தாமரைக்குளத்தில் அருகில் உள்ள வீடுகளின் சாக்கடை, மாட்டுக் கொட்டகையின் கழிவுநீா் நேரடியாக கலக்கிறது. ஒப்பந்ததாரா்கள் புனரமைப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளகிறாா்களா என்பதை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்காததே இதற்கு காரணம் என்றனா்.

இதுகுறித்து அம்பத்தூா் மண்டல மாநகராட்சிப் பொறியாளா்கள் கூறுகையில், இந்த இரண்டு குளங்களின் மண் உறுதித்தன்மை குறைவாக உள்ளது. இதனால், அவற்றின் கரைகள் சேதமடைந்துள்ளன. ஒப்பந்ததாரா்களிடம் தெரிவித்து இடிந்துள்ள கரைகள், நடைப்பயிற்சி பாதைகள் விரைவில் சரி செய்யப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாலு பிரசாத் மகளுக்கு எதிராக லாலு பிரசாத் போட்டி?

நெல்சன் தயாரிப்பில் முதல் படம் யாருடன்?

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

SCROLL FOR NEXT