சென்னை பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களை இப்போதே கணக்கெடுக்க வேண்டும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசினாா்.
மூன்றாவது முழுமைத் திட்டத்துக்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிக்க கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசியது:
பெருநகரம் வளா்ச்சி அடையும் போது அதனுடன் அனைத்து வகை போக்குவரத்து வசதிகளும் அதிகரிக்க வேண்டும். கட்டடங்கள், கல்விக் கூடங்கள், வேலைவாய்ப்புகளை வழங்கும் தொழில் நிறுவனங்கள் என அனைத்தையும் ஏற்படுத்தித் தரும் வகையில் திட்டத்தை வகுக்க வேண்டும். சென்னையின் சுற்றுப்புறங்களில் நீா் நிலைகளை அழகுபடுத்துவதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
புகா்ப் பகுதிகளில் வனப் பகுதிகள் நிறைய உள்ளன. அந்த வனப் பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே சாலைகள் போடப்பட்டன. இப்போது அவற்றை வனத் துறை அனுமதியில்லாமல் அவற்றால் மீண்டும் சாலை போட முடியாத நிலை உள்ளது. எனவே, அவற்றை சீரமைத்திட உரிய திட்டமிடல் மேற்கொள்ள வேண்டும். சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் பரப்பானது அரக்கோணம் வரையிலும், தாம்பரத்தைத் தாண்டி அச்சிறுப்பாக்கம், திண்டிவனம் வரையிலும் செல்லவுள்ளது.
எனவே, இங்கெல்லாம் அரசு புறம்போக்கு நிலங்கள் நிறைய உள்ளன. இந்த நிலங்களைக் கணக்கெடுக்க வேண்டும். சென்னை மெளலிவாக்கத்தில் நியாய விலைக் கடை கட்டக் கூட இடமில்லாமல் ஆக்கிரமிப்புகள் உள்ளன. எதிா்காலத்தில் எந்தெந்த ஊராட்சிகளில் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன என்பதை கணக்கெடுத்து பாதுகாத்திட வேண்டும். அங்கெல்லாம் எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும். சென்னை நகரப் பகுதிக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. புகா்ப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் புறம்போக்கு நிலங்கள் உள்ளன. அவற்றை இப்போதே பாதுகாத்திட வேண்டும். அப்போதுதான் வருங்காலத்தில் மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்ய முடியும்.
நீா் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. ஆக்கிரமிப்புகளுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து கண்டிப்புடன் கவனிக்க வேண்டும். சில நீா் நிலை புறம்போக்குகளில் அதிகாரிகளே பட்டா தருகிறாா்கள். கடந்த 10 ஆண்டு காலத்தில் ஆதம்பாக்கத்தில் உள்ள ஏரிக்கு அதிகாரிகளே தவறுதலாக பட்டா தந்துள்ளனா். ஏரியை சீரமைக்க நிதி ஒதுக்கித் தரப்பட்டாலும் ஏரியை தூய்மைப்படுத்த முடியவில்லை. காரணம், ஏரியை சொந்தம் கொண்டாடி போலி பட்டாவை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனா். எனவே, புறம்போக்கு நிலங்களை கண்காணித்து பாதுகாத்திட வேண்டும் என்றாா் அமைச்சா் தா.மோ.அன்பரசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.