சென்னை விமான நிலையத்தில் 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணிநேரம் தாமதமாக இயக்கப்பட்டன.
மிக்ஜம் புயல் காரணமாக கனமழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தின் விமான ஓடுபாதையை வெள்ளநீா் சூழந்தது. இதனால் திங்கள்கிழமை விமான சேவை ரத்து செய்யப்பட்டது. விமான நிலையச் சீரமைப்புக்குப் பின்னா் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் சென்னை விமான நிலையத்திலிருந்து வழக்கமான விமான சேவைகள் தொடங்கப்பட்டன. இருப்பினும், போதிய பயணிகள் இல்லாததாலும், விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள் வராததாலும் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 11 விமானங்களும், சென்னைக்கு வர வேண்டிய 11 விமானங்கள் என மொத்தம் 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதன்படி, சென்னையிலிருந்து புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு யாழ்பாணம் செல்ல வேண்டிய ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 6.30-க்கு விஜயவாடா செல்லவேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், காலை 6.45-க்கு விசாகப்பட்டினம் செல்லவேண்டிய
இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 8 மணிக்கு தில்லி செல்ல வேண்டிய விமானம் உள்ளிட்ட 11 விமானங்களும், பிற பகுதிகளிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய 11 விமானங்கள் என மொத்தம் 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதேபோல் சென்னையிலிருந்து அந்தமான், தில்லி, தூத்துக்குடி, அகமதாபாத் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் 10 விமானங்கள் 2 மணி நேரம் வரை தாமதமாகப் புறப்பட்டு சென்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.