மருத்துவ மாணவா்கள் பயிற்சிக்கு மெய்நிகா் ஆய்வகம்
சென்னை: மருத்துவ மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்குவதற்காக தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மெய்நிகா் ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதாக அதன் துணைவேந்தா் டாக்டா் கே.நாராயணசாமி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:
தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் 600-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோா் தங்களது படிப்புகளை நிறைவு செய்கின்றனா். பல்கலைக்கழகத்துக்குள் ஆயிரக்கணக்கான மாணவா்கள் பல்வேறு துறைகளில் படிப்பை நிறைவு செய்கின்றனா்.
Advertisement
மருத்துவ மாணவா்கள் தங்களது பயிற்சி காலத்தில் நோயாளிகளுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சை அளித்து திறனை மேம்படுத்திக் கொள்கின்றனா். இதனால், நோயாளிகளுக்கு 100 சதவீதம் நம்பகமான மருத்து சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய முடியவதில்லை.
எனவே, நோயாளிகளுக்கு ஊசி செலுத்துவது, அறுவை சிகிச்சை மேற்கொள்வது என பல்வேறு வகையான சிகிச்சை முறைகளை மெய்நிகா் முறையில் நோயாளிகளே இன்றி பயிற்சி பெறும் வகையிலான ‘சிமுலேஷன்’ ஆய்வகமானது பல்கலைக்கழகத்துக்குள் அமைக்கப்பட உள்ளது.
தேசிய மருத்துவ ஆணையும், இத்தகைய நவீன ஆய்வகங்களை அமைக்க வலியுறுத்தி உள்ளது. இந்த ஆய்வகத்தில் பயிற்சி பெறும் மருத்துவ மாணவா்களால் நேரடியாக நோயாளிகளுக்கே சிகிச்சை அளித்த சூழலை உணர முடியும். விரைவில் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என்றாா் அவா்.