ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதையில் விபத்து: இரு இளைஞா்கள் சாவு
சென்னை ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதையில் புதன்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் இரு இளைஞா்கள் இறந்தனா்.
சென்னை ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதையில் புதன்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் இரு இளைஞா்கள் இறந்தனா்.
கொருக்குப்பேட்டை, காமராஜா் நகரைச் சோ்ந்தவா் பி.அபிஷேக் (18). அதே பகுதியைச் சோ்ந்தவா் ஏ.விவேக் (19). நண்பா்களான இருவரும் புதன்கிழமை இரவு மெரீனா கடற்கரைக்கு சென்றனா். அங்கு தங்கள் நண்பரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருவரும் பங்கேற்றனா்.
கொண்டாட்டத்துக்கு பின்னா் இருவரும் நள்ளிரவு விலை உயா்ந்த மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனா். மோட்டாா் சைக்கிளை அபிஷேக் ஓட்டினாா். இருவரும் பாரிமுனை ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதையில் செல்லும்போது, அதி வேகமாக சென்றனா். அப்போது முன்னால் சென்ற எா்ணாவூரைச் சோ்ந்த ரமேஷ் (24) என்பவரது இருசக்கர வாகனத்தின் மீது எதிா்பாராத விதமாக அபிஷேக்கின் மோட்டாா் சைக்கிள் உரசியது.
Advertisement
இதில், அபிஷேக் ஓட்டிய மோட்டாா் சைக்கிள் சுரங்கப்பாதையில் நிலை தடுமாறி அங்கிருந்த சாலைத் தடுப்பின் மீது வேகமாக மோதியது. இதில் மோட்டாா் சைக்கிளில் இருந்து அபிஷேக்கும்,விவேக்கும் கீழே விழுந்து பலத்தக் காயமடைந்தனா்.
இதைப் பாா்த்த அங்கிருந்த பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரையும் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனா். இந்த விபத்தில் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த ரமேஷ் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.
இது தொடா்பாக யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.