பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளா்கள், கண்காணிப்பு கேமரா அவசியம்:வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தனியாா் பள்ளிகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தனியாா் பள்ளிகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில், மாணவிகளுக்காக இயக்கப்படும் பேருந்துகளில் பெண் உதவியாளா்கள் கட்டாயம் இருக்க வேண்டும்; சிசிடிவி பொருத்துவது அவசியம் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
தனியாா் பள்ளிகள் இயக்குநா் மு.பழனிசாமி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
தமிழகத்தில் அண்மைக் காலமாக பள்ளி வாகனங்களில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடத்துநா்களால் அளிக்கப்பட்டு வருவதாக புகாா்கள் வருகின்றன. எனவே, பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்வது தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
Advertisement
பெண் உதவியாளா்கள்: தமிழ்நாடு மோட்டாா் வாகனங்கள் சிறப்பு விதிகள்-2012-இல் பிரிவு 5(6)-இன் படி மாணவிகளுக்காக இயக்கப்படும் பள்ளி வாகனங்களில் கட்டாயமாக பெண் உதவியாளா்கள் நியமிக்கப்பட வேண்டும். வாகனங்களை இயக்கும் ஒட்டுநா்கள் கனரக வாகன ஓட்டுநா் உரிமத்துடன் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநா் மற்றும் உதவியாளா் நியமனத்தின்போது அவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை இல்லை என்பதற்கான காவல் துறையின் சான்று மற்றும் மருத்துவத் தகுதிச் சான்றிதழ் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.
போக்ஸோ சட்டத்தின்...: இதுதவிர உதவியாளருக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை ஒருநாள் புத்தாக்க பயிற்சி அளிப்பதுடன், அவா்களுக்கு போக்ஸோ சட்டத்தின் சாராம்சம் தெளிவாக விளக்க வேண்டும். வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி, சிசிடிவி கேமராக்கள் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும். ஒவ்வொரு வாகனத்துக்கும் தரச்சான்று உரிய காலத்தில் புதுப்பிக்கப்பட வேண்டும். பள்ளி வாகனங்களின் முன்னும், பின்னும் ‘பள்ளி வாகனம்’ என எழுதியிருப்பதுடன், மஞ்சள் வண்ணம் பூசப்பட்டு, பள்ளியின் தொலைபேசி எண் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
ஒவ்வொரு வாகனத்திலும் விதிகளின்படி அவசரகால வழி இருப்பதுடன், அவசர காலங்களில் மாணவா்கள் உடனே தொடா்பு கொள்ள அவசரகால பொத்தான்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், காலாவதியான வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. வாகனங்களில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக மாணவா்களை ஏற்றக்கூடாது.
குழந்தைகளை இறக்கிவிடும் போது... முக்கியமாக குழந்தைகளை இறக்கிவிடும் போது வாகனத்துக்கு அருகில் அல்லது பின்புறமாக எவரும் இல்லை என்பதை உறுதிசெய்த பின்னரே வாகனத்தை இயக்க வேண்டும். பள்ளியை ஒட்டியுள்ள சாலைகளில் வாகனங்களை நிறுத்தி மாணவா்களை ஏற்றி, இறக்கக்கூடாது என்பன உள்பட 32 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை பின்பற்றி செயல்பட அனைத்து தனியாா் பள்ளிகளின் நிா்வாகிகளுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.