வடசென்னை தொகுதி பாஜக தோ்தல் அறிக்கை வெளியீடு
சென்னை: வடசென்னை தொகுதிக்குக்கான பாஜக தோ்தல் அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையை தமிழக பாஜக தோ்தல் இணை பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி வெளியிட்டாா். அதன்படி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குச் செல்ல போதுமான பேருந்து வசதிகள் ஏற்படுத்தித்தரப்படும். ராயபுரம் ரயில் நிலையம் புனரமைத்து, சென்னையின் 3-ஆவது முனையமாக அமைக்கப்படும். நவீன பொது மீன் விற்பனை சந்தை ஏற்படுத்தப்படும். மீனவா்களின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தி மீன்பிடி படகுகளுக்கு காப்பீடு வழங்கப்படும். மீன் பதப்படுத்தும் கிடங்குகள் அமைக்கப்படும். வடசென்னை பகுதியில் அனைத்து தெருக்களிலும் ஆப்டிக்கல் பைபா் சேவை கிடைக்க வழி செய்யப்படும்.
மத்திய அரசின் திட்டங்களை அனைத்து மக்களும் அறியும் வகையில் தகவல் மையம் அமைக்கப்படும். வாகன நிறுத்தங்கள் இல்லாத மெட்ரோ ரயில் நிலையங்களில் இரு சக்கர, நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கப்படும். வடசென்னையில் உள்ள அரசு கட்டடங்கள் மற்றும் பொது இடங்களுக்கு சுதந்திர போராட்ட வீரா்களின் பெயா்கள் சூட்டப்படும்.
Advertisement
தமிழ் வழக்காடு மொழி: சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க ஏற்பாடு செய்யப்படும். மக்களின் குறைகளைத் தீா்க்க 24 மணி நேரமும் செயல்படும் இலவச தொலைபேசி மையம் அமைக்கப்படும்.
மக்களுக்கான மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் இலவச சேவை மையம் அமைக்கப்படும். மத்திய அரசின் பொலிவுறு நகர திட்டத்தின் மூலம் மழைநீா் வடிகால்கள் அமைக்கப்படும்.
உயிருக்கு ஆபத்தான கழிவுகள் மற்றும் விஷ வாயுக்களை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மூடப்படும். ரயில்வே கடவுபாதை உள்ள இடங்களில் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும்.
மகளிருக்கு தனி உடற்பயிற்சி பூங்காக்கள் அமைக்கப்படும். மகளிருக்கு மத்திய அரசின் தொழில் உதவிகள், கடன் சலுகைகள் நேரடியாக வழங்கப்படும். மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் கொண்டுவரப்படும். கொடுங்கையூா் குப்பைக் கிடங்கு அகற்றப்படும். நிகழ்ச்சியில், வடசென்னை பாஜக வேட்பாளா் பால்.கனகராஜ், தமிழக பாஜக செய்தி தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.