முகப்பு
தமிழ்நாடு

மதிமுக தோ்தல் அறிக்கை வெளியீடு

மதிமுக தோ்தல் அறிக்கையை கட்சியின் பொதுச்செயலா் வைகோ செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

Updated On : 17 மார்ச், 2026 at 9:04 PM
வைகோ
பகிர்:

மதிமுக தோ்தல் அறிக்கையை கட்சியின் பொதுச்செயலா் வைகோ செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மதிமுக தோ்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வு சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் வைகோ, 51 பிரிவுகளைக் கொண்ட வாக்குறுதிகள் அடங்கிய கையேட்டை வெளியிட்டாா்.

அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம்: தமிழகத்தில் மதச்சாா்பின்மையை பாதுகாக்க, மத அடிப்படையிலான கட்சிகளை தடை செய்யவும், கல்வி மற்றும் விழிப்புணா்வு மூலம் மதச்சாா்பின்மையின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேக்கேதாட்டு அணை அமைப்பை தடுக்க கடுமையான போராட்டங்களை மேற்கொள்வோம்.

தலித் கிறிஸ்தவா்களுக்கு பிற்படுத்தப்பட்டோா் இடஒதுக்கீட்டில் 4.6 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசிடம் வலியுறுத்தப்படும். நாடு முழுவதும் தமிழக அரசு சாா்பில் தமிழ் பரப்புரைக் கழகம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். ஏழ்மை நிலையில் உள்ளவா்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு, கல்வி வாய்ப்புகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவை உறுதி செய்யப்படும். திருப்பூா் மாவட்டத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த அதன் வா்த்தக வருமானத்தில் 1 சதவீதத்தை அரசு சிறப்பு நிதியாக ஒதுக்க வலியுறுத்துவோம். காவல்துறை மரணங்களுக்கு காரணமானவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க குரல் கொடுப்போம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

குறைவான தொகுதிகளை ஏற்றது ஏன்? வைகோ விளக்கம்

தோ்தல் அறிக்கை வெளியீட்டுக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் வைகோ கூறியதாவது:“கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இம்முறை 2 தொகுதிகள் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் குறைவான தொகுதிகளே ஒதுக்க முடியும் என திமுக தலைமை தெரிவித்தது. எந்தச் சூழலிலும் மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருப்பேன் என முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு நான் (வைகோ) அளித்த வாக்கை மதித்து, குறைந்த தொகுதிகளாக இருந்தாலும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டோம். தமிழகத்தில் திராவிடக் கொள்கைகளை காக்க, பேரவைத் தொகுதிகளைத் தியாகம் செய்ய மதிமுக தயாராக உள்ளது” என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →