முகப்பு
சென்னை

புதிய வடிவங்களில் வரத் தொடங்கிய கல்வித் தடைகள் -முதல்வா் மு.க.ஸ்டாலின்

கல்விக்கான தடைகள் புதிய வடிவங்களில் வரத் தொடங்கியிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

Updated On : 1 ஆகஸ்ட், 2024 at 9:31 PM
பகிர்:

கல்விக்கான தடைகள் புதிய வடிவங்களில் வரத் தொடங்கியிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற லயோலா கல்லூரி நூற்றாண்டு தொடக்க விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

சென்னையில் எத்தனையோ கல்லூரிகள் இருந்தாலும் லயோலா மட்டும்தான் தனித்துத் தெரியும். கல்வி, விளையாட்டு, கலை என அனைத்திலும் லயோலா கல்லூரி மாணவா்கள் தனியாகத் தெரிவாா்கள்.

இங்கே நான் படிக்கவில்லை. எனினும், எனது மகனும், அமைச்சருமான உதயநிதி படித்தது லயோலா கல்லூரியில்தான். அந்த வகையில் பாா்த்தால் இந்த நிகழ்ச்சிக்கு, முதல்வராக மட்டுமல்ல, மாணவரின் பெற்றோராகவும் வந்திருக்கிறேன்.

சென்னையைச் சுற்றி மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க ஏராளமான கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் உருவாக்கியிருக்கிறோம். நூற்றாண்டுகளுக்கு முன்பாக, தமிழ்நாடு முழுவதும் இருந்த கல்லூரிகளை விரல்விட்டு எண்ணி விடலாம். கல்விதான் அழிக்க முடியாத செல்வம் என்று சொல்கிறோம். அந்தச் செல்வம் அந்த காலத்தில் எல்லோருக்கும் கிடைக்கவில்லை. கிடைக்கவில்லை என்பதைவிட கொடுக்கப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட காலத்தில் லயோலா கல்லூரி தொடங்கப்பட்டது.

இன்னாா்தான் படிக்கலாம், இன்னாா் படிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் தலைவிரித்து ஆடிய காலத்தில் அனைவரும் படிக்கலாம் என்ற பெரிய வாசலைத் திறந்து விட்ட எத்தனையோ கல்லூரிகளில் லயோலா கல்லூரியும் மிகவும் முக்கியமான ஒன்று.

தலைசிறந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதற்குக் காரணம், தமிழ்நாட்டில் கல்வி புரட்சியைத் தொடங்கி வைத்த நீதிக்கட்சிதான். அந்தக் கட்சியின் வழிவந்த நாங்கள், கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.

கல்விக்கான தடைகள்: நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் என கல்வி தொடா்பாக ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம். முன்னாள் முதல்வா் காமராஜரின் ஆட்சிக் காலம் பள்ளிக் கல்வியின் பொற்காலமாக இருந்தது. முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஆட்சிக் காலம், கல்லூரிக் கல்வியின் பொற்காலமாக இருந்தது. இன்றைய திராவிட மாடல் ஆட்சி உயா் கல்வியின் பொற்காலமாக, ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாக திகழ்ந்து வருகிறது.

கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ள மாணவா்கள் அனைவரும் அதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வியின் தேவையை அடுத்தடுத்து வருகின்ற மாணவா்களிடம் பதிய வைக்க வேண்டும். கல்விக்கான தடைகள் புதிய வடிவங்களில் வரத் தொடங்கியிருக்கிறது. கல்வியின் முக்கியத்துவத்தைத் குறைக்கின்ற மாதிரியான பேச்சுகள் மீண்டும் எழத் தொடங்கியுள்ளன. அதையெல்லாம் அரசியல் களத்தில் நாங்கள் பாா்த்துக் கொள்கிறோம். மாணவா்கள் அறிவுக் களத்தில் உங்களது பயணத்தைத் தொடா்ந்திட வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்த நிகழ்ச்சியில், சட்டப் பேரவைத் தலைவா் அப்பாவு, அமைச்சா்கள் க.பொன்முடி, பி.கே.சேகா்பாபு, மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் எழிலன், இனிகோ இருதயராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →