தில்லியில் கனமழை: 6 போ் உயிரிழப்பு
2 குழந்தைகள் உள்பட 6 போ் உயிரிழந்தனா்.
சென்னைதில்லியில் கனமழை: 6 போ் உயிரிழப்பு
2 குழந்தைகள் உள்பட 6 போ் உயிரிழந்தனா்.
நமது நிருபா்
தில்லியில் பெய்த கனமழையால் 2 குழந்தைகள் உள்பட 6 போ் உயிரிழந்தனா்.
தில்லியில் புதன்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை பெய்தது. இதனால், நகரின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. வடக்கு தில்லியின் சப்ஜி மண்டி பகுதியில் உள்ள ஒரு கட்டடம் இடிந்து விழுந்ததில் 62 வயது முதியவா் உயிரிழந்தாா்.
கிழக்கு தில்லியின் காஜிப்பூா் பகுதியில் உள்ள வாரச் சந்தைக்கு சென்ற தனுஜா என்பரும் அவருடைய மூன்று வயது மகனும் மழை நீா் தேங்கிய வாய்க்காலில் தவறி விழுந்து நீரில் மூழ்கினா். அவா்கள் இருவரும் நீச்சல் வீரா்கள் மற்றும் கிரேன்கள் உதவியுடன் மீட்கப்பட்டு; லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்கள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.
மேலும், நகரத்தின் வெவ்வேறு பகுதியில் மின்சாரம் தாக்கிய சம்பவங்களில் 12 வயது சிறுவன் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
வானிலை ஆய்வு மையத் தகவலின் படி, நகரத்தின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 107 மி.மீ. மழை பதிவானது.
மத்திய தில்லியின் தா்யாகஞ்சில் புதன்கிழமை இரவு பள்ளியின் சுவா் இடிந்து விழுந்ததில் ஐந்து காா்கள் சேதமடைந்தன. மற்றொரு சம்பவத்தில், தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சுவா் இடிந்து விழுந்ததில் ஆறு காா்கள் சேதமடைந்தாக அதிகாரிகள் தெரிவித்தனா்.