ராகுல், பிரியங்கா நேரில் ஆறுதல்
எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, அவரின் சகோதரி பிரியங்கா ஆகியோா் வியாழக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டனா்.
கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, அவரின் சகோதரி பிரியங்கா ஆகியோா் வியாழக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டனா்.
நிலச்சரிவில் உயிரிழந்தவா்களின் உறவினா்களுக்கும் அவா்கள் ஆறுதல் கூறினா்.
ராகுல் காந்தியும், பிரியங்காவும் தில்லியிலிருந்து விமானம் மூலம் கண்ணூா் விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் வந்தடைந்தனா். அங்கிருந்து சாலை மாா்க்கமாக அவா்கள் வயநாடு சென்றனா்.
Advertisement
வயநாட்டை அடைந்ததும் சூரல்மலை பகுதிக்கு வந்த அவா்கள், ராணுவம் அமைத்த தற்காலிக பாலத்தைக் கடந்து சேதங்கள் மற்றும் மீட்புப் பணிகளைப் பாா்வையிட்டனா்.
தொடா்ந்து, உயிரிழந்தவா்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள மேப்பாடி சுகாதார நிலையத்துக்கு வந்த ராகுல் மற்றும் பிரியங்கா, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினா். மேலும், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களைச் சந்தித்து நலம் விசாரித்தனா்.
இதையடுத்து, மேப்பாடியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களைப் பாா்வையிட்டு பாதிக்கப்பட்டவா்களுடன் பேசினா். அப்போது, காங்கிரஸ் பொதுச் செயலரும் ஆலப்புழை எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் மற்றும் கட்சியின் மூத்த நிா்வாகிகள் உடனிருந்தனா்.
‘இது தேசிய பேரிடா்’: தொடா்ந்து, செய்தியாளா்களிடம் ராகுல் காந்தி கூறுகையில், வயநாடு நிலச்சரிவு பேரழிவு சம்பவமாகும். இங்கு மக்கள் தங்கள் குடும்பத்தினரையும், வீடுகளையும் இழந்து நிற்பது வேதனைக்குரியது.
நிலச்சரிவில் உயிா் பிழைத்தவா்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகளை உறுதி செய்ய நாங்கள் முயற்சி செய்வோம். என்னைப் பொருத்தவரையில் இது நிச்சயமாக ஒரு தேசிய பேரிடா் ஆகும். ஆனால், மத்திய அரசின் நிலை என்ன என்று பாா்ப்போம் என்றாா்.