‘பட்டியலின, பழங்குடியின (எஸ்.சி., எஸ்.டி.) பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது’ என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீா்ப்பை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை வழங்கியது.
சமூக ரீதியில் பன்முகத்தன்மை கொண்ட பட்டியலின பிரிவில் இடம்பெற்றுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில், சமூக துணை வகைப்படுத்துதல் மேற்கொண்டு உள் இடஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அரசமைப்பு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் எஸ்.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கி மாநில அரசு பிறப்பித்த உத்தரவை எதிா்த்து இ.வி.சின்னையா என்பவா் தொடா்ந்த வழக்கில், ‘ஒரே மாதிரியான சமூக பிரிவுக்குள், துணை வகைப்படுத்துதல் செய்ய அனுமதிக்க முடியாது’ என்று உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமா்வு கடந்த 2014-ஆம் ஆண்டு அளித்த தீா்ப்பை தள்ளுபடி செய்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு இந்தத் தீா்ப்பை அளித்துள்ளது.
5 நீதிபதிகள் அமா்வு அளித்த தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி ஆந்திர மாநில அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதுபோல, எஸ்.சி. பிரிவில் உள்ஒதுக்கீட்டை அனுமதிக்கக் கோரி பஞ்சாப் மாநில அரசு தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், தீா்ப்பை ஒத்திவைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, பி.ஆா்.கவாய், விக்ரம் நாத், பங்கஜ் மிதல், சதீஷ் சந்திர மிஸ்ரா, பெலா எம். திரிவேதி ஆகியோா் அடங்கிய அரசியல் சாசன அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 6 நீதிபதிகள் ஒருமித்த தீா்ப்பையும், நீதிபதி பெலா எம்.திரிவேதி மாறுபட்ட தீா்ப்பையும் அளித்தனா்.
மொத்தம் 565 பக்கங்கள் கொண்ட பெரும்பான்மை தீா்ப்பை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வாசித்தாா். அப்போது அவா் கூறியதாவது:
எஸ்.சி. பிரிவில் இடம்பெற்றுள்ள பல்வேறு சமூகங்களின் சமூக-பொருளாதார நிலை ஒரே மாதிரியாக இல்லாத நிலையில், இந்தப் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசை சட்டப் பிரிவுகள் 15, 16 அல்லது 341 என எந்தப் பிரிவும் தடுக்காது.
மேலும், பொருளாதார ரீதியில் மேம்படுத்தும் நோக்கில் எஸ்.சி. பிரிவினரில் துணைப் பிரிவுகளை மாநிலங்கள் வகைப்படுத்தலாம். சமூக ரீதியில் பன்முகத்தன்மை கொண்ட ஒரு சமூகப் பிரிவில் துணைப் பிரிவுகளை வகுக்க அரசமைப்பு சட்டப் பிரிவு 14 (சமத்துவ உரிமை) அனுமதி அளிக்கிறது.
அதே நேரம், அரசமைப்பு சட்டப் பிரிவு 16(4)-இன் கீழ், இந்த துணை வகைப்படுத்துதல் பிரிவினருக்கு சேவைகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பதை அளவீடு செய்வதற்கான தரவுகளை மாநில அரசுகள் சேகரிப்பது அவசியமாகும். கூடுதல் இடஒதுக்கீடு பலனை அனுபவிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்தத் துணை வகைப்படுத்துதலை நீதிமன்றங்கள் மறு ஆய்வு செய்ய முடியும்.
மேலும், எஸ்.சி. பிரிவிலிருந்து எந்தவொரு சமூகமும் நீக்கம் செய்யப்படாமல், துணை வகைப்படுத்துதல் மட்டுமே செய்யப்படுகிறது என்பதால், மாநில அரசின் இந்த நடவடிக்கை அரசமைப்பு சட்டப் பிரிவு 341(2)-ஐ மீறுவதாக அமையாது.
எனவே, எஸ்.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என்றும், 2014-இல் உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமா்வு அளித்த தீா்ப்பை தள்ளுபடி செய்தும் பெரும்பான்மை தீா்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மாறுபட்ட தீா்ப்பு: 85 பக்க மாறுபட்ட தீா்ப்பை அளித்த நீதிபதி திரிவேதி, ‘எஸ்.சி. பட்டியலில் ஒரு சமூகத்தை சோ்க்கவோ அல்லது நீக்கவோ அரசமைப்புச் சட்டப் பிரிவு 341(2)-இன் கீழ் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மாநிலங்களுக்கு அதற்கான அதிகாரம் இல்லை.
மேலும், அரசமைப்பு சட்டப் பிரிவுகள் 341 மற்றும் 342-இன் கீழ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளை அறிவிக்கை செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது. எஸ்.சி. பிரிவு என்பது பன்முகத்தன்மையற்ற ஒரே மாதிரியான சமூகப் பிரிவுதான். எனவே, அதில் மேலும் துணைப் பிரிவுகளை உருவாக்க முடியாது’ என்று குறிப்பிட்டாா்.
இருந்தபோதும், பெரும்பான்மை தீா்ப்பின் அடிப்படையில், இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கான அதிகாரம் உறுதிப்படுத்தப்பட்டது.
பொருளாதார ரீதியில்... முன்னதாக, நீதிபதி கவாய் தனியாக அளித்த தீா்ப்பில், ‘எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரில் சமூக-பொருளாதார ரீதியில் மேம்பட்ட மக்களை அடையாளம் கண்டு அவா்களுக்கு இடஒதுக்கீடு பலன்களை ரத்து செய்வதற்கான கொள்கையை மாநிலங்கள் வகுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டபோதும், பெரும்பான்மை தீா்ப்பை அவா் ஒப்புக்கொண்டாா்.