அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் வெள்ளிக்கிழமை உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தது.
புது தில்லி, ஆக.2: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் வெள்ளிக்கிழமை உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தது.
இதுதொடா்பாக மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு காங்கிரஸ் பொதுச் செயலரும், அக்கட்சியின் மாநிலங்களவைத் தலைமை கொறடாவுமான ஜெய்ராம் ரமேஷ் எழுதியுள்ள கடிதத்தில், ‘கேரளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு பலமுறை முன்னெச்சரிக்கை விடுத்ததாகவும், அந்த முன்னெச்சரிக்கைகளை கேரள அரசு கவனத்தில் கொள்ளவில்லை என்றும் மாநிலங்களவையில் மத்திய அமைச்சா் அமித் ஷா அண்மையில் தெரிவித்தாா். அவா் கூறிய தகவலின் உண்மைத்தன்மை குறித்து விரிவான ஆய்வை ஊடகம் மேற்கொண்டது. அந்த ஆய்வின் மூலம், அமித் ஷா கூறிய தகவல் பொய் என்பது நிரூபணமாகியுள்ளது.
நாடாளுமன்ற அவையை அமைச்சரோ அல்லது எம்.பி.யோ தவறாக வழிநடத்துவது உரிமை மீறல் மட்டுமின்றி, அவையை அவமதிப்பதாகும். எனவே இந்த விவகாரத்தில் அமித் ஷா மீது உரிமை மீறல் நடவடிக்கை மேற்கொள்ள நோட்டீஸ் சமா்ப்பிக்கப்படுகிறது என்று தெரிவித்தாா்.