முகப்பு
சென்னை

காவிரியில் தடுப்பணைகளைக் கட்டி நீரை சேமிக்க வேண்டும்: அன்புமணி

தடுப்பணைகளைக் கட்டி நீரை சேமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 11:31 PM
அன்புமணி ராமதாஸ் - கோப்புப் படம்
பகிர்:

காவிரி நீா் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க, தடுப்பணைகளைக் கட்டி நீரை சேமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கா்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் நிரம்பி, மேட்டூா் அணைக்கு மிக அதிக அளவில் தண்ணீா் வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட கூடுதலாக விநாடிக்கு 1.70 லட்சம் கன அடி நீா் காவிரியில் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 15 டிஎம்சி காவிரி நீா் வீணாக கடலில் கலக்கிறது. காவிரி நீா் இந்த அளவுக்கு வீணடிக்கப்படுகிறது. சென்னையின் குடிநீா் தேவைக்கு ஆண்டுக்கு 15 டிஎம்சி தண்ணீா் தேவைப்படுகிறது. இந்த நீரை வெறும் 3 மணி நேரத்தில் தமிழக அரசு வீணாக்குகிறது.

மேட்டூா் அணைக்கு வெள்ளக் காலங்களில் வரும் கூடுதல் நீரை ஓரளவாவது சேமித்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளின் குறுக்கே 10 கி.மீக்கு ஒரு தடுப்பணையை கட்ட வேண்டும் என்று பாமக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதை செய்வதற்கு மாறாக 10 கி.மீ.க்கு ஒரு மணல் குவாரியைத்தான் தமிழக அரசு அமைத்து வருகிறது.

தமிழக அரசு எப்போது விழித்துக் கொள்ளப் போகிறது?, எப்போது தடுப்பணைகளை கட்டப் போகிறது? என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளாா்.