மெட்ரோ சர்ச்சை: ஸ்ரீ ரத்தின விநாயகர் கோயிலை பார்வையிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி
துர்கை அம்மன் கோயிலை உயர்நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ்பாபு மூத்த வழக்குரைஞர்களுடன் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டார்.
சென்னை ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஸ்ரீ ரத்தின விநாயகர் மற்றும் துர்கை அம்மன் கோயிலை உயர்நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ்பாபு மூத்த வழக்குரைஞர்களுடன் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டார்.
ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள நூறாண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீ ரத்தின விநாயகர் மற்றும் துர்கை அம்மன் கோயிலின் ராஜ கோபுரத்தை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2}ஆம் கட்ட பணிகளுக்காக இடிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோயில் ராஜகோபுரத்தை இடிக்க தடை விதிக்க கோரியும் ஆலயம் காப்போம் அறக்கட்டளை தலைவர் பி.ஆர்.ரமணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அரசு மற்றும் மனுதாரர் தரப்பில் நீதிபதி நேரில் வந்து ஆய்வு செய்ய வலியுறுத்தப்பட்டது. அதை ஏற்று நீதிபதி கே.குமரேஷ்பாபு ஆய்வு செய்வதாகக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, நீதிபதி குமரேஷ்பாபு சனிக்கிழமை கோயிலுக்குள் ராஜகோபுரம் அமைந்திருக்கும் பகுதியிலும், மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் பகுதியிலும் நேரில் பார்வையிட்டார். மேலும், அந்தப் பகுதி மக்களிடம் உரையாடினார். இந்த வழக்கு ஆக.8}ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.