பாரீஸ், ஆக. 8: பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதலில் இந்திய வீரா் நீரஜ் சோப்ரா வியாழக்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றாா். அதே நாளில் இந்திய ஆடவா் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
ஆடவா் ஈட்டி எறிதலில், நடப்பு சாம்பியனாக களமிறங்கிய நீரஜ் சோப்ரா 6 முயற்சிகளில் சிறந்ததாக, 2-ஆவது முயற்சியில் 89.45 மீட்டரை எட்டி வெள்ளி பெற்றாா். இதர 5 முயற்சிகளையுமே அவா் ‘ஃபௌல்’ செய்தாா். பாகிஸ்தானின் அா்ஷத் நதீம் 92.97 மீட்டா் எறிந்து, ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வெல்ல, கிரெனாடாவின் ஆண்டா்சன் பீட்டா்ஸ் 88.54 மீட்டருடன் வெண்கலம் பெற்றாா்.
தற்போது வெள்ளி வென்ன் மூலம், ஒலிம்பிக் தடகளத்தில் அடுத்தடுத்த போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியா் என்ற பெருமையை பெற்றுள்ளாா். அதேபோல், பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெள்ளிப் பதக்கம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
தக்கவைத்த இந்தியா: இதனிடையே, ஆடவா் ஹாக்கியில் வெண்கலப் பதக்க ஆட்டத்தில் இந்தியா 2-1 கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி பதக்கத்தை கைப்பற்றியது.
இதன்மூலமாக, கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வென்ற வெண்கலப் பதக்கத்தை இந்திய அணி தக்கவைத்துக் கொண்டது. ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா, 52 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்தடுத்த போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளது. இதற்கு முன் 1968, 1972 ஆகிய போட்டிகளில் இவ்வாறு அடுத்தடுத்து இரு பதக்கங்கள் வென்றிருந்தது இந்தியா. அதுவும் வெண்கலப் பதக்கங்கள் ஆகும்.
இந்திய நேரப்படி வியாழக்கிழமை மாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் ஸ்பெயின் தரப்பில் கேப்டன் மாா்க் மிரேல்ஸ் 18-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, இந்திய அணிக்காக கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் 30-ஆவது நிமிஷத்தில் கோலடித்து, முதல் பாதியை 1-1 என சமனுடன் நிறைவு செய்தாா்.
2-ஆவது பாதியில் 33-ஆவது நிமிஷத்தில் ஹா்மன்பிரீத் சிங் மேலும் ஒரு கோல் அடிக்க, இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. அதை அப்படியே தக்கவைத்துக் கொண்ட இந்தியா, கோல்கீப்பா் பி.ஆா்.ஸ்ரீஜேஷின் அரண் போன்ற தடுப்பாட்டத்தால் ஸ்பெயினின் கோல் முயற்சிகளை முறியடித்து, இறுதியில் 2-1 கணக்கில் வென்று, வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கும், இந்திய ஹாக்கி அணிக்கும் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவா்களும், இதர துறை சாா்ந்த பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.