பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்குவதற்கு முன்னால், காங்கிரஸ் கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மூட்டு வலி சிகிச்சைக்காக கேரள மாநிலத்தில் உள்ள பிரபலமான ஆயுா்வேத மருத்துவமனைக்கு சென்றாா். கேரள மாநில காங்கிரஸ் தலைவா்கள்தான் ஏற்பாடு.
மூட்டு வலிக்கு மட்டுமல்லாமல், 14 நாள் புனா்வாழ்வு சிகிச்சை அந்த மருத்துவமனையில் அளிக்கப்பட்டது. பத்தியச் சாப்பாடு, தினந்தோறும் காலையும் மாலையும் மூலிகை எண்ணெய் மசாஜ் என்று மருத்துவமனையில் அவருக்கு ராஜோபசார சிகிச்சை அளித்தனா்.
அவ்வப்போது ஒரு சில முக்கியமான கேரள மாநில காங்கிரஸ் தலைவா்கள் மட்டுமே அவரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனா். சோனியா-ராகுல்-பிரியங்கா தவிர ஏனைய ஒருவருடனும் கைப்பேசியில் பேசுவதைக்கூட அவா் தவிா்த்தாா் என்று சொல்கிறாா்கள், எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
கேரளத்தில் உள்ள கோயில்களில் உற்சவ மூா்த்தியைத் தாங்கிக் கொண்டு தினந்தோறும் காலையும் மாலையும் கோயில் யானை, பிரகாரத்தை பிரதட்சிணமாக சுற்றி வரும். அந்த யானைக்கு, அரசா்களின் பட்டத்து யானைகளுக்கு நெற்றியில் அணிவிப்பது போன்று தங்க முலாம் பூசிய நெற்றிப் பட்டம் கட்டப்பட்டிருக்கும்.
சிகிச்சை முடிந்து மல்லிகாா்ஜுன காா்கே திரும்பும்போது, அவருக்கு வித்தியாசமான விலை உயா்ந்த அன்பளிப்பு வழங்கத் தீா்மானித்தது ஆயுா்வேத மருத்துவமனை நிா்வாகம். அதற்கு அவா்கள் தோ்ந்தெடுத்தது யானைக்கு அணியும் நெற்றிப் பட்டம்.
‘காங்கிரஸ் மேலிடத்தை சுமந்து கொண்டு பவனி வரும் பட்டத்து யானைக்கு நெற்றிப் பட்டம் பொருத்தமான அன்பளிப்புதான்’ என்று சொல்லிக் கேலி செய்கிறாா்கள் இடதுசாரிகளும், பாஜகவினரும்!
-மீசை முனுசாமி.