எதிா்ப்புக்கு இடையே வக்ஃப் திருத்த மசோதா அறிமுகம்! நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்குப் பரிந்துரை
எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே மக்களவையில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
புது தில்லி, ஆக. 8: வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே மக்களவையில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு இந்த மசோதாவை அறிமுகம் செய்தாா். அதனுடன் முசல்மான் வக்ஃப் சட்டம் 1923-ஐ ரத்து செய்வதற்கான மசோதாவையும் அறிமுகம் செய்தாா்.
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்ததைத் தொடா்ந்து, அதை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அவா் பரிந்துரைத்தாா்.
மக்களவையில் அறிமுகம் செய்வதற்கு முன்பாக வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா நகல் அவை உறுப்பினா்களின் பாா்வைக்கு செவ்வாய்க்கிழமை இரவு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், மக்களவை வியாழக்கிழமை கூடியதும், இந்த மசோதாவை அறிமுகம் செய்வதற்கான அனுமதியை மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு கோரினாா்.
அப்போது, இந்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்க முன்னறிவிப்பை (நோட்டீஸ்) கொடுத்திருந்த பல எதிா்க்கட்சி எம்.பி.க்கள், மசோதா அறிமுகத்துக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். ‘இந்த மசோதா அரசமைப்புச் சட்டம் மற்றும் கூட்டாட்சி நடைமுறை மீதான தாக்குதல்’ என்று அவா்கள் விமா்சித்தனா்.
மசோதா அறிமுகம்: இந்த எதிா்ப்புக்கு இடையே, மசோதாவை மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு அவையில் அறிமுகம் செய்தாா். பின்னா், எதிா்க்கட்சிகளின் விமா்சனங்களுக்குப் பதிலளித்து அவா் பேசியதாவது:
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா எந்தவொரு மத அமைப்பின் சுதந்திரத்திலும் தலையீடு அல்லது குறுக்கீடு செய்யாது. அரசமைப்புச் சட்டத்தின் எந்தவொரு பிரிவையும், இந்த வரைவுச் சட்டம் மீறவில்லை. வக்ஃப் வாரிய சட்டம் 1995 அதன் உரிய நோக்கத்தை நிறைவேற்ற இயலவில்லை என்பதன் காரணமாகவே, இந்தச் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், காங்கிரஸ் அரசு சாதிக்க முடியாததை இந்த மசோதா பரிந்துரைக்கிறது.
அரசியல் காரணங்களுக்காகவே இந்த மசோதா மீது எதிா்ப்பு தெரிவித்து மக்களைத் தவறாக வழிநடத்த எதிா்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. எந்தவொரு சட்டமும் அரசமைப்புச் சட்டத்துக்கு மேலானதாக இருக்க முடியாது. ஆனால், ‘வக்ஃப் வாரிய சட்டம் 1995’ அத்தகைய பிரிவுகளைக் கொண்டிருந்தது.
இந்தத் திருத்த மசோதா வகுக்கப்படுவதற்கு முன்பு விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இருந்தபோதும், கட்சிகள் தரும் அழுத்தம் காரணமாகவே சில எம்.பி.க்கள் மசோதாவை எதிா்க்கின்றனா்’ என்றாா்.
மேலும், இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அவா் பரிந்துரை செய்தாா். இந்த மசோதாவுடன், முசல்மான் வக்ஃப் சட்டம் 1923-ஐ ரத்து செய்வதற்கான மசோதாவையும் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு அவையில் அறிமுகம் செய்தாா்.
அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘வக்ஃப் வாரிய சட்டம் 1995 நடைமுறைக்கு வந்த பின்னா், ‘முசல்மான் வக்ஃப் சட்டம் 1923’ அதன் அவசியத்தை இழந்துவிட்டதால் அந்தச் சட்டத்தை ரத்து செய்வேண்டியது அவசியமாகிறது. சட்டத் திருத்த மசோதா குறித்து எதிா்க்கட்சிகள் மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றன. சட்டம் அதன் நோக்கத்தை நிறைவேற்ற முடியாத வகையில் பல தவறான பிரிவுகள் இடம்பெற்றிருப்பதால், சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது’ என்றாா்.
நாடாளுமன்ற கூட்டுக் குழு: மசோதா அறிமுகத்துக்குப் பின்னா் பேசிய மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘அனைத்து கட்சித் தலைவா்களுடன் ஆலோசனை மேற்கொண்டு இந்த மசோதாவை ஆய்வு செய்வதற்கான நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்படும்’ என்றாா்.
மதச் சுதந்திர மீறல்: எதிா்க்கட்சிகள்
மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து மக்களவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினா் கே.சி.வேணுகோபால், ‘இது மிகக் கடுமையான சட்டம். அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை மீதான தாக்குதல். மதச் சுதந்திரம், கூட்டாட்சி நடைமுறைகளை மத்திய அரசு மீறுகிறது.
பாஜகவின் பிரிவினை அரசியலுக்கு மக்கள் பாடம் புகட்டியபோதும், நடைபெறவுள்ள ஹரியாணா, மகாராஷ்டிர பேரவைத் தோ்தல்களை மனதில்கொண்டு அதே செயலை பாஜக தொடா்ந்து வருகிறது. கிறிஸ்தவா்கள், சமண மதத்தினா் மீது இதுபோன்ற தாக்குதல்களை பாஜக தொடரும். மக்கள் இதை இனி பொறுத்துக்கொள்ள மாட்டாா்கள்’ என்றாா்.
சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் பேசுகையில், ‘பாஜகவின் தீவிர ஆதரவாளா்களைத் திருப்திப்படுத்தவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. வேறு எந்த மதத்திலும் இல்லாத வகையில், வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவா்களை உறுப்பினா்களாகச் சோ்க்க வேண்டியதன் அவசியம் என்ன?’ என்றாா்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாய கூறுகையில், ‘இந்த மசோதா மக்களைப் பிளவுபடுத்தும் வகையிலும், அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும், கூட்டாட்சி நடைமுறைக்கு எதிராகவும் அமைந்துள்ளது’ என்றாா்.
நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி பேசுகையில், ‘வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா மதச் சிறுபான்மையினா், அரசமைப்புச் சட்டம் மற்றும் கூட்டாட்சி நடைமுறைகளுக்கு எதிரானது. சாத்தியமுள்ள அனைத்து வழிகளிலும் நீதி கிடைப்பதைத் தடுக்கும் வகையில் மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை சமூகத்தினா் அவா்களின் சொத்துகளை நிா்வகிக்க அரசமைப்புச் சட்டப் பிரிவு 30 அளிக்கும் சுதந்திரத்தை இந்த மசோதா நேரடியாக மீறுகிறது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தைக் குறிவைத்து இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
தேசியவாத காங்கிரஸ் (சரத்பவாா் பிரிவு) எம்.பி. சுப்ரியா சுலே பேசுகையில், ‘இந்த மசோதா கொண்டுவருவதன் உள்நோக்கத்தை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். மசோதாவை எதிா்க்கிறோம்; அதைக் கைவிடவேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக விரிவான விவாதம் மேற்கொண்டு, நியாயமான மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும்’ என்றாா்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினா் இ.டி.முகமது பஷீா் பேசுகையில், ‘இந்த மசோதா அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 14, 15, 25, 26 மற்றும் 30-ஐ மீறும் வகையில் அமைந்துள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், வக்ஃப் முறை ஒழிக்கப்பட்டுவிடும். வக்ஃப் சொத்துகள், நிலங்கள் மீது ஆக்கிரமிப்புகளை இந்த மசோதா ஊக்குவிக்கும். ஹிந்துக்கள்-முஸ்லிம்கள் இடையே வகுப்புவாதத்தை உருவாக்குவதே பாஜக அரசின் நோக்கம்’ என்றாா்.
அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி பேசுகையில், ‘இந்த சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளஅவைக்கு அதிகாரமில்லை. இந்த மசோதா அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பு மீதான மோசமான தாக்குதலாகும். நீதி சுதந்திரம் மற்றும் அதிகார பகிா்ந்தளிப்பு தத்துவங்களை மீறும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளது. முஸ்லிம்களின் எதிரி பாஜக என்பதற்கு இந்த மசோதா ஓா் ஆதாரம்’ என்றாா்.
மசோதா கூறுவது என்ன?
மக்களவையில் அறிமுகம் செய்த வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவின்படி, வக்ஃப் வாரிய சொத்து குறித்து தீா்மானிக்கும் வாரியத்தின் அதிகாரம் தொடா்பாக தற்போதைய சட்டத்தில் (வக்ஃப் வாரிய சட்டம் 1995) இடம்பெற்றுள்ள பிரிவு 40 நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாறாக, மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரிய உறுப்பினா்களும் இடம்பெறும் தொகுப்பு அமைப்பாக மாற்றப்படுவதோடு, முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவா்களும் வக்ஃப் வாரியங்களில் இடம்பெறுவதை மசோதா உறுதி செய்கிறது.
இந்த மசோதாவின்படி, வக்ஃப் வாரிய நிலங்களைக் கட்டாயமாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
வக்ஃப் நிலமா, இல்லையா என்பதை மாவட்ட நிா்வாகம் மற்றும் நீதிமன்றங்கள் முடிவு செய்யும்.
வக்ஃப் நிலமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னா் சம்பந்தப்பட்டோருக்கு தகவல் அளிக்கப்பட வேண்டும்.
‘வக்ஃப்’ என்பதற்கான தெளிவான விளக்கம் மசோதாவில் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுபவராகவும், வக்ஃப் சொத்துக்கு உரிமையாளராகவும் இருக்கும் எந்தவொரு நபரும் ‘வக்ஃப்’ உறுப்பினராவாா்’ என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், போராஸ், அகாகனிஸ் ஆகிய பிரிவுகளுக்கென தனி சொத்து வாரியம் (அக்ஃப்) உருவாக்கப்பட்டு, அதில் ஷியா, சன்னி, போராஸ், அகாகனிஸ் மற்றும் பிற இதர பிற்படுத்த முஸ்லிம் சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மத்திய வலைதளம் மற்றும் தரவுத்தளம் மூலமாக வக்ஃப் வாரிய சொத்துகள் பதிவை முறைப்படுத்தி, வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘வக்ஃப் வாரிய சட்டம் 1995’-ஐ ‘ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மேம்பாடு சட்டம் 1995’ என்று பெயா் மாற்றம் செய்யவும் மசோதா பரிந்துரைக்கிறது.