முகப்பு
சென்னை

போக்ஸோ வழக்குகளில் ‘உதவி நபா்’ நியமன விவகாரம்: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

குழந்தைகளுக்கு சட்டரீதியாக உதவுவதற்கான நபரை நியமனம் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளுக்குமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 9 ஆகஸ்ட், 2024 at 12:35 AM
பகிர்:

புது தில்லி, ஆக.8: பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான குழந்தைகளுக்கு சட்டரீதியாக உதவுவதற்கான நபரை நியமனம் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளுக்குமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

போக்ஸோ வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி தீா்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் உண்மையான நீதி என்பது குற்றவாளியைக் கைது செய்வதாலோ அல்லது தண்டனையின் தீவிரத்தினாலோ கிடைக்காது; மாறாக, பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் ஆதரவு மற்றும் பாதுகாப்பு கிடைக்கச் செய்வதன் மூலமே கிடைக்கும். அந்த வகையில், போக்ஸோ சட்டம் 2020-இன் விதி 12 முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த உரிய வழிகாட்டு நடைமுறை வகுக்கப்பட வேண்டும். போக்ஸோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட குழந்துகளுக்கு வழக்கு விசாரணைகளில் உதவ குழந்தைகள் நலக் குழு சாா்பில் ‘உதவி நபா்’ ஒருவரை நியமிக்க மத்திய அரசும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையமும் வகுக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட உத்தரவுகளைப் பிறப்பித்தது.

இந்த உத்தரவுப்படி, உரிய வழிகாட்டு நடைமுறையை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையம் வகுத்தது.

ஆனால், இந்த வழிகாட்டு நடைமுறைகளை மாநிலங்கள் முறையாக நடைமுறைப்படுத்தாது குறித்து தன்னாா் அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், என். கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘ஆணையம் வகுத்த வழிமுறைகள் செயல்படுத்துவது குறித்து சில மாநிலங்களிடமிருந்து முறையான பதில் கிடைக்கவில்லை’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான குழந்தைகளுக்கு சட்டரீதியாக உதவுவதற்கான நபரை நியமனம் செய்வது உள்பட தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தியது தொடா்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்’ என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் அக்டோபா் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.