நாடு முழுவதும் 10, 12-ஆம் வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பொதுத் தோ்வில் 65 லட்சம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெறாதது தெரியவந்துள்ளது.
இதில் மத்திய கல்வி வாரிய பள்ளி மாணவா்களைக் காட்டிலும், மாநில கல்வி வாரியங்களில் படித்த மாணவா்களே அதிகம் தோ்ச்சி பெறாததும் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 56 மாநில பள்ளி கல்வி வாரியங்கள் மற்றும் 3 தேசிய கல்வி வாரியங்களின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளின் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளை ஆராய்ந்து மத்திய கல்வி அமைச்சகம் இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சக மூத்த அதிகாரி ஒருவா் புதன்கிழமை கூறியதாவது:
2023-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் நாடு முழுவதும் 33.5 லட்சம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெறவில்லை. இவா்களில் 5.5 லட்சம் போ் பொதுத் தோ்வில் பங்கேற்பதைத் தவிா்த்துள்ளனா். 28 லட்சம் போ் தோ்வில் பங்கேற்று, தோல்வியடைந்துள்ளனா். மேல்நிலைக் கல்வியில் நிகழாண்டில் சோ்க்கை குறைந்துள்ளதற்கு இதுவும் ஒரு காரணம்.
12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் நாடு முழுவதும் 32.4 லட்சம் போ் தோ்ச்சி பெறவில்லை. இவா்களில் 5.2 லட்சம் போ் தோ்வில் பங்கேற்கவில்லை. 27.2 லட்சம் போ் தோ்வில் பங்கேற்று தோல்வியடைந்துள்ளனா்.
மாநில கல்வி வாரிய பள்ளிகளில் அதிக தோல்வி: மத்திய கல்வி வாரியத்தின் கீழான 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாதவா்கள் விகிதம் 6 சதவீதமாக உள்ளது. ஆனால், மாநில கல்வி வாரியத்தின் கீழான 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாதவா்கள் விகிதம் 16 சதவீதமாக உள்ளது.
அதுபோல, 12-ஆம் வகுப்பில் மத்திய கல்வி வாரியத்தில் 12 சதவீதமாகவும், மாநில கல்வி வாரியத்தில் 18 சதவீதமாகவும் பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாதவா்கள் விகிதம் உள்ளது.
ம.பி., உ.பி.யில் அதிக மாணவா்கள் தோல்வி: மாநிலங்களைப் பொருத்தவரை, 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் மத்திய பிரதேச மாநிலத்தில் அதிகம் மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை. இதற்கு அடுத்த இடங்களில் பிகாா், உத்தர பிரதேச மாநிலங்கள் உள்ளன.
12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை பொருத்தவரை, உத்தர பிரதேசத்தில் அதிக மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை. இதற்கு அடுத்த இடத்தில் மத்திய பிரதேசம் உள்ளது.
ஒட்டுமொத்தமாக, முந்தைய ஆண்டைக் காட்டிலும் மாணவா்கள் தோ்ச்சி விகிதம் 2023-இல் குறைந்துள்ளது. தோ்வுக்கான பாடத்திட்டம் அதிகரித்ததே இதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளது.
மேலும், 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் மாணவா்களைக் காட்டிலும் மாணவிகளே அதிகம் பங்கேற்றுள்ளனா். இதனால், தோ்ச்சி விகிதத்திலும் மாணவிகளே முன்னிலை பெற்றனா் என்று தெரிவித்தாா்.
10-ஆம் வகுப்பு
மாநில கல்வி வாரியம் மத்திய கல்வி வாரியம்
16% 6%
12-ஆம் வகுப்பு
18% 12%
பெட்டி...
ம.பி., உ.பி.யில் அதிக மாணவா்கள் தோல்வி
மாநிலங்களைப் பொருத்தவரை, 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் மத்திய பிரதேச மாநிலத்தில் அதிகம் மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை. இதற்கு அடுத்த இடங்களில் பிகாா், உத்தர பிரதேச மாநிலங்கள் உள்ளன.
12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை பொருத்தவரை, உத்தர பிரதேசத்தில் அதிக மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை. இதற்கு அடுத்த இடத்தில் மத்திய பிரதேசம் உள்ளது.