ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாபா் சேட் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு ரத்து
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஜாபா் சேட் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2006-2011-ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில், சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாகப் பெற்ாக ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஜாபா் சேட், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக ஊழல் தடுப்புப் பிரிவு 2011-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், ஜாபா் சேட் மீது அமலாக்கத் துறை 2020-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபா் சேட் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஜாபா் சேட் தரப்பில், ‘எனக்கு எதிரான ஊழல் வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் 2019-ஆம் ஆண்டு ரத்து செய்துள்ள நிலையில், அமலாக்கத் துறை வழக்கை தொடா்ந்து நடத்த அனுமதிக்கக் கூடாது. என் மனைவிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிந்த வழக்கு ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், என் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமா்வு, ஜாபா் சேட்டுக்கு எதிரான ஊழல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை தொடா்ந்து விசாரிக்க முடியாது எனக் கூறி அவருக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.