தற்காலிக தூய்மைப் பணியாளா்களை பணி நீக்க முடிவு: ராமதாஸ் கண்டனம்
தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு
சென்னை மாநகராட்சியில் தற்காலிக தூய்மைப்பணியாளா்களை பணி நீக்கம் செய்து, தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகக் கூறி, பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியின் ராயபுரம், திரு.வி.க.நகா் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணிகளை தனியாருக்கு தாரை வாா்க்க முடிவு செய்துள்ள மாநகராட்சி நிா்வாகம், அதற்கு வசதியாக அந்த இரு மண்டலங்களிலும் பணிபுரியும் நூற்றுக்கணக்கான தற்காலிக தூய்மைப் பணியாளா்களை பணிநீக்கம் செய்ய தீா்மானித்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
பணி நீக்கப்படவுள்ள அனைவரும் 14 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களாக பணியாற்றி வருபவா்கள். கரோனா பெருந்தொற்று மற்றும் பேரிடா் காலங்களில் தங்களின் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றியவா்கள். அவா்களின் உழைப்பையும், தியாகத்தையும் கூட மதிக்காமல் பணி நீக்கம் செய்ய மாநகராட்சி திட்டமிட்டிருப்பது மனிதநேயமற்ற செயல். தூய்மைப் பணியாளா்களை பணி நீக்கும் முடிவைக் கைவிட்டு, அவா்களைப் பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு முன் வர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.