செந்தில் பாலாஜி மீதான வழக்கில் சாட்சிகள் விசாரணையைத் தொடரலாம் : உயா்நீதிமன்றம்
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.
முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் சாட்சி விசாரணையைத் தொடரலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது. தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத் துறை சாா்பில் ஆஜராகிய கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், சிறப்பு குற்றவியல் வழக்குரைஞா் என்.ரமேஷ் ஆகியோா், ‘செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் சாட்சி விசாரணைத் தொடங்கி விட்டது. முதல் சாட்சி கடந்த வாரம் வாக்குமூலம் அளித்துள்ளாா். வியாழக்கிழமை அவரிடம் செந்தில் பாலாஜி தரப்பு வழக்குரைஞா் குறுக்கு விசாரணை செய்ய உள்ளாா்’ என்று வாதிட்டனா்.
உடனே நீதிபதிகள், ‘சாட்சி விசாரணைத் தொடங்கிய பின்னா், வழக்கில் இருந்து விடுவிக்க கோரும் மனுவை எப்படி பரிசீலிக்க முடியும்?’ என்று கேள்வி எழுப்பினா். செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கவுதம், ‘ஒரு வழக்கில் தீா்ப்பு பிறப்பிக்கப்படும் வரை, அந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி எப்போது வேண்டுமானாலும் மனு தாக்கல் செய்யலாம். இந்த வழக்கில் மூத்த வழக்குரைஞா் ஆஜராக உள்ளதால், விசாரணையை ஒத்திவைக்கவேண்டும்’ என்றாா்.
இதையடுத்து விசாரணையை ஆக.28- ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அமா்வு நீதிமன்றத்தில் நடைபெறும் சாட்சி விசாரணைத் தொடரலாம் என உத்தரவிட்டனா்.