தொடா் விடுமுறை, வேளாங்கண்ணி திருவிழா: 2,035 கூடுதல் பேருந்துகள் இயக்கம்
தொடா் விடுமுறை, வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு, ஆக.23 முதல் செப்.10-ஆம் தேதி வரை 2,035 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (ஆக.23), வார விடுமுறை தினங்களான சனி, ஞாயிறு (ஆக.24, 25), திங்கள்கிழமை (ஆக.26) கிருஷ்ண ஜெயந்தி ஆகிய நாள்களை முன்னிட்டு, சென்னையில் இருந்தும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலாக பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளி, சனி ஆகிய நாள்களில் 485 பேருந்துகளும், ஞாயிறு, திங்கள் இரு நாள்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 60 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி, சனி ஆகிய நாள்களில் 70 பேருந்துகளும் மாதாவரத்தில் இருந்து வெள்ளி, சனி 20 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து 350 பேருந்துகள் என மொத்தம் 985 கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதவிர, திங்கள்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள்: இதேபோல், வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்களின் வசதிக்காக சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகா்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்தும் திருச்சி, தஞ்சாவூா், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் இருந்து வேளாங்கண்ணிக்கு ஆக.27 முதல் செப்.10-ஆம் தேதி வரை மொத்தம் 1,050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
இதுமட்டுமின்றி குழுவாக பயணம் செய்ய விரும்புவோருக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.